
தமிழ்நாடு அரசில் கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென தமிழ்நாடு அரசு கடந்த 2023 இல் கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் விதிகளைக் கொண்டு வந்தது. இந்த விதிகளில் சில திருத்தங்களை மேற்கெள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியது. அதோடு மாநில அளவில் ஒற்றை முன்னுரிமைப் பட்டியலை பரிந்துரை செய்ய சிறப்புக் குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் தமிழ்நாடு அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் தலைமையின் கீழ் ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப் படி கருணை அடிப்படையில் செய்யப்படும் பணி நியமனங்களுக்கான விதிகளில் சில திருத்தங்களை அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதன்படி இன்று புதிய திருத்தங்களுக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
புதிய திருத்தங்கள்:
1. தமிழ்நாடு முழுவதும் கருணை அடிப்படையில் செய்யப்படும் பணி நியமன விண்ணப்பங்கள் அனைத்தும் இனி ஒற்றை முன்னுரிமைப் பட்டியலாகவே பராமரிக்கப்படும். இதற்கு முன்பு வரை மாவட்ட வாரியாக இந்தப் பட்டியல் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது மாநிலம் முழுவதும் ஒரே பட்டியல் என்பதால், அனைவருக்கும் நியாயமான வாய்ப்பு கிடைக்கும். இதன்படி ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, உடனடியாக பணி நியமனம் வழங்கப்படும்.
2. டிஜிட்டல் மயமாக்கும் வகையில் விண்ணப்பங்கள் அனைத்தையும் இனி ஆன்லைன் போர்ட்டல் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது.
3. கருணை அடிப்படையிலான பணி நியமன விண்ணப்பங்களுக்கு 3 ஆண்டுகள் என்ற காலக்கெடுவிற்குள் பணி நியமனத்தை அரசு வழங்க வேண்டும். நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த இந்தக் கோரிக்கைக்கு தற்போது ஒரு தீர்க்கமான முடிவு கிடைத்துள்ளது.
மேற்கண்ட புதிய திருத்தங்களின் படி கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும். அதோடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வண்ணம் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒரு அரசு ஊழியர் திடீரென இறந்து விட்டால், அவரது குடும்பம் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். இதனைத் தடுக்கும் வகையில் இறந்த அரசு ஊழியரின் கணவர் அல்லது மனைவி, மகள் அவ்லது மகன் மற்றும் தத்து மகன் அல்லது தத்து மகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்.
பெரும்பாலும் குரூப் C அல்லது குரூப் D அரசுப் பணிகள் தான் வழங்கப்படும். இறந்த அரசு ஊழியர் தவிர குடும்பத்தில் வேறு யாரும் அரசு வேலையில் இல்லாமல் இருந்தால் தான் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.
இதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18. கணவன் அல்லது மனைவி 50 வயதுக்குள்ளும், மகன் அல்லது மகள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.