
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO), ஆதிதிராவிட மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆதிதிராவிட மக்கள் பொருளாதார அளவில் முன்னேற்றம் காணவும், தொழில் தொடங்கவும் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் விண்ணபிக்கும் நடைமுறையை எளிதாக்கி உள்ளது தமிழக அரசு. இதன்மூலம் இனி தாட்கோ வழங்கும் திட்டங்களுக்கு இ-சேவை மையங்களின் மூலமாகவே விண்ணபிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம், முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு தொழில் முனைவோர் திட்டம் மற்றும் மத்திய அரசின் PM-AJAY உள்ளிட்ட பல திட்டங்கள் வழியாக ஆதிதிராவிடர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரையில் தாட்கோ அலுவலகம் மற்றும் இணையம் வழியாகவே பொதுமக்கள் இத்திட்டத்தில் பலன்பெற விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இச்சேவையை எளிதாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளதால், இனி அருகிலுள்ள இ-சேவை மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி கா.பொற்கொடி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “PM-AJAY, ARISE, ஆவின் பாலகத் திட்டம் மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். இனி இதற்காக யாரும் தாட்கோ அலுவலகத்திற்கு அலைய வேண்டிய அவசியமில்லை. தாட்கோ மூலம் வழங்கப்படும் சேவைகளை ஆதிதிராவிட மக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்ட பின்பு, அரசு சேவைகளைப் பெற விண்ணப்பிக்கும் நடைமுறை அனைத்தும் எளிதாக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது தாட்கோ திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் இ-சேவை மையங்கள் உதவி புரிகின்றன.
தமிழக அரசு பொதுமக்களுக்கு எண்ணற்ற சேவைகளை வழங்கினாலும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதது பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் தாட்கோ திட்டங்களுக்கு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க முடியும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.