
நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ வழியாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆன்லைன் பரிவர்த்தனையை பாதுகாப்பாக மேற்கொள்ள யுபிஐ நிறுவனங்கள் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் கைரேகை மற்றும் முக அடையாளத்தைக் கொண்டு யுபிஐ வழியாக பணம் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் யுபிஐ மூலமாக BHIM செயலியில் பணத்தைப் பாதுகாப்பாக அனுப்புவதற்கு சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வந்தபின், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பயன்படுத்தத் தொடங்கினர். இதில் எந்த அளவிற்கு பலன்கள் உள்ளதோ, நாம் எச்சரிக்கையாக இல்லை என்றால் அதே அளவிற்கு விளைவுகளையும் சந்திக்க நேரிடும். ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து வரும் இன்றைய சூழலில், பணப் பரிவர்த்தனையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு யுபிஐ மற்றும் நிதி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன்படி தற்போது BHIM செயலியில் பாதுகாப்பாக பணத்தை அனுப்புவதற்கு சில புதிய வசதிகள் பயனர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பீம் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான லலிதா நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மொபைல் போன் மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்தபிறகு, பலரும் அதிக அளவில் பணத்தை செலவு செய்யத் தொடங்கினர். ரொக்கமாக செலவு செய்ததைக் காட்டிலும், ஆன்லைன் பரிவர்த்தனையில் பலரும் அதிக செலவு செய்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் ஒரு சிலர் கையில் ரொக்கமாக பணம் வைத்துக் கொள்வதே இல்லை. யுபிஐ மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனையை மட்டுமே நம்பி வெளியில் செல்கின்றனர்.
இந்நிலையில் பணத்தின் மதிப்பை உணர்த்தும் நோக்கத்துடன் ‘BHIM Payments’ செயலி 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.எளிமை,புதுமை ஆகியவற்றால், பீம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வெளியில் சென்று சாப்பிடும் போதோ அல்லது பொருட்களை வாங்கும் போதோ மற்றும் வாடகையைக் கொடுக்கும் போது, பீம் செயலியில் செலவுகளைப் பிரித்து நேரடியாக பணம் செலுத்த முடியும்.
செலவு பகுப்பாய்வு வசதி, ஃபேமிலி மோட் வசதி மற்றும் யுபிஐ சர்க்கிள் வசதி போன்ற புதிய வசதிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.
குடும்ப செலவுகளையும் பீம் செயலியில் கண்காணிக்க முடியும். இதற்காகவே ‘ஃபேமிலி மோட்’ என்ற வசதி இதில் உள்ளது. இந்த வசதியில் குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள முடியும். அதில் குடும்ப செலவுகளை கண்காணிக்கும் வசதி உள்ளது. ஒரு பயனரின் மாத செலவுகளை கண்காணிக்க முடியும். அவசியம் இல்லாத செலவுகளை தவிர்க்க முடியும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும்.
ஒரு முதன்மை பயனாளர், 5 இரண்டாம் நிலை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்த அங்கீகரிக்கக் கூடிய வசதியும் இதில் உள்ளது. இதற்காகவே யுபிஐ சர்க்கிள் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.