

அளவற்ற இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்கத் தொடங்கிய பிறகு தான், இந்தியாவில் யூடியூப் செயலியின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கேற்ப 2020 காலகட்டத்தில் கொரோனா ஊரடங்கின் காரணமாக, பொதுமக்கள் வெளியில் செல்லாத நிலை ஏற்பட்டது. இந்நேரத்தில் பலருக்கும யூடியூப் வீடியோக்கள் தான் பொழுதுபோக்காக இருந்தது. இன்று அனைவரது ஸ்மார்ட்போன்களிலும் தவிர்க்கவே முடியாத ஒரு முக்கிய செயலியாக யூடியூப் இருக்கிறது. அதோடு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சமூக வலைதள செயலியாக யூடியூப் திகழ்கிறது.
யூடியூப் நிறுவனம் அவ்வப்போது பயனர்களுக்கு புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது பழைய வீடியோக்களை உயர்ந்த தரத்தில் பார்ப்பதற்கான வசதியை விரைவில் கொண்டு வரவுள்ளது. இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வந்து விட்டால், பயனர்கள் தங்களுக்குப் பிடித்த பல வீடியோக்களை HD தரத்தில் பார்க்க முடியும்.
யூடியூப் செயலிக்கு போட்டியாக பல செயலிகள் களத்தில் குதித்தாலும், இணைய உலகில் யாராலும் வீழ்த்த முடியாத வகையில் பயனர்களை கவர்ந்து வருகிறது யூடியூப். யூடியூப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, பெரும்பாலான மக்கள் டிவி பார்ப்பதையே நிறுத்தி விட்டனர் எனலாம்.
இந்நிலையில் பயனர்களுக்கு ஏஐ உதவியுடன் ஒரு புது வசதியைக் கொண்டு வர யூடியூப் கொண்டு வரவுள்ளது. இதன்படி ஏற்கனவே யூடியூப்பில் உள்ள தரம் குறைவான வீடியோக்களை, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரம் உயர்த்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெகு விரைவில் இந்த புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்து விடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
யூடியூப்பின் இந்த புதிய வசதியின் படி 1080p தரத்திற்கும் குறைவான பழைய வீடியோக்கள், ஏஐ மூலமாக ஆட்டோமெட்டிக் முறையில் தரம் உயர்த்தப்படும். இதுமட்டுமின்றி இனி யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களின் தரம் குறைவாக இருந்தாலும் கூட, அவை ஆட்டோமெட்டிக் முறையில் HD தரத்திற்கு மாற்றப்படும்.
இதன்படி இனி யூடியூப்பில் தரம் குறைவான வீடியோக்களே இருக்காது என்கிறது இந்நிறுவனம். யூடியூப்பின் இந்த புதிய வசதியால் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்கள் மட்டுமின்றி, பார்ப்பவர்களும் பயனடைவார்கள்.
ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் பழைய மற்றும் புதிய வீடியோக்களை 4K, HD மற்றும் Ultra HD வரை தரத்தை உயர்த்த யூடியூப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பயனர்கள் தங்கள் மொபைலில் யூடியூப் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று ‘Super Resolution’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், வீடியோக்கள் அனைத்தும் தானாகவே தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம் இனி பழைய படங்களை கூட யூடியூபில் எச்டி தரத்தில் பார்க்கலாம். இந்த வசதி பழைய படங்கள் மற்றும் வீடியோக்களை விரும்பி பார்ப்போருக்கு அதிகளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.