

அதிக வளர்ச்சி கண்டு வரும் இன்றைய தொழில்நுட்ப உலகில், மொபைல் போன்கள் அனைவருக்குமே அத்தியாவசியம் என்ற நிலையில் தான் உள்ளன. தொடக்க காலத்தில் பட்டன் டைப் வகையிலான ஃபோன்கள் பயன்பாட்டிற்கு வந்த போது, தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கு மட்டுமே உதவின. ஆனால் ஆண்ட்ராய்டு வகையிலான ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்திற்கு வந்த பிறகு, மொபைல் போன்களில் பலவிதமான வசதிகள் கொண்டுவரப்பட்டன.
தற்போது லைவ் வீடியோக்களை பார்ப்பது முதல் ஆன்லைனில் பல்வேறு வசதிகளை பயன்படுத்த இணைய வசதி அவசியம். இணைய வசதி இருந்தால் தான் மொபைல் போனில் அனைத்துமே சாத்தியமாகும்.
இந்நிலையில் இணைய வசதி இல்லாமலேயே வீடியோக்களை பார்க்கும் புதிய வசதி வெகு விரைவில் வர உள்ளது. இதற்காக Direct To Mobile (D2M) என்ற புதிய வசதியை சோதனை செய்து வருகின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
யூடியூப் வீடியோக்களை பார்த்தல், உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுதல், லைவ் விளையாட்டுகளை பார்த்தல் மற்றும் தேவையான தகவல்களை தேடுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இணைய வசதி உதவுகிறது. இணைய வசதியின் சிறப்பான செயல்பாட்டிற்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரிதும் பங்காற்றி வருகின்றன.
இருப்பினும் ஒரு சில இடங்களில் சிக்னல் குறைவால் இணைய வசதியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் கனமழை வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளின் போதும் தொலைத்தொடர்புகளின் சிக்னல் பாதிக்கப்படுகிறது. இம்மாதிரியான நேரங்களில் இணைய வசதி இல்லாமல் லைவ் வீடியோக்களை பார்க்கவும், உடனடி செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒரு சூப்பர் வசதி இருந்தால் எப்படி இருக்கும் என பலரும் நினைத்தது உண்டு.
இதற்கான சோதனை முயற்சிகள் தான் தற்போது பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடந்து வருகிறது. அடுத்த 9 மாதங்களில் நாட்டின் 24 மாநிலங்களில் ‘டைரக்ட் டூ மொபைல்’ வசதியை சோதனையைச் செய்ய வல்லுநர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சோதனை முயற்சிகள் முடிவுக்கு வந்தபின் D2M வசதி அனைத்து ஃபோன்களிலும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதியின் முக்கிய அம்சமே ஸ்மார்ட் போன்கள் மட்டுமல்லாது, பட்டன் ஃபோன்களிலும் லைவ் வீடியோக்களை பார்க்க முடியும் என்பது தான்.
பிரபல மொபைல் நிறுவனங்களான லாவா மற்றும் ஹெச்.எம்.டி ஆகியவை ரூ.2,000 முதல் ரூ.2,500 விலையில், D2M வசதியுடன் பட்டன் ஃபோன்களை தயாரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இனிவரும் ஸ்மார்ட் போன்களிலும் D2M வசதி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக D2M வசதியில் மத்திய அரசின் பிரசார் பாரதி தூர்தர்ஷன் சேனல்களை நேரலையில் பார்க்கும் வசதி விரைவில் கொண்டு வரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரேடியோ FM மற்றும் டிடிஎச் சேவைகளைப் போலவே D2M வசதியும் செயல்பட உள்ளது. இந்த புதிய வசதியில் சிக்னல்கள் ரிசீவராக மாற்றப்படுவதன் மூலம், தொழில்நுட்பத்துடன் எளிதாக இணைக்கப்பட்டு லைவ் வீடியோக்களை பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.