

நாட்டில் மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) செயல்பட்டு வருகிறது. மாதச் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் தொகைக்கு கூட்டு வட்டி முறையில் மத்திய அரசு வட்டியை செலுத்துகிறது.
இந்நிலையில் பிஎப் பணத்தை வாடிக்கையாளர்கள் எளிதாக அணுகும் வகையில், தற்போது விதிகளைத் தளர்த்தி வருகிறது EPFO நிறுவனம். இன்று அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டதன் காரணத்தால், பொதுமக்களால் பிஎப் சேவைகளை எளிதாக அணுக முடியும். இந்நிலையில் ஊழியர்கள் மத்தியில் பிஎப் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் எடுக்க முடியுமா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக சில சூழ்நிலைகளில் மட்டுமே 100% பிஎப் பணத்தை எடுக்க EPFO அனுமதிக்கிறது. அதேசமயம் வருங்கால நிதிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குறைந்தது 25% பணத்தை இருப்பு வைக்கவும் இந்நிறுவனம் பரிந்துரைக்கிறது.
முன்பெல்லாம் ஊழியர்களின் பங்களிப்பிலிருந்து மட்டுமே பிஎப் தொகையை எடுக்கும் வசதிகள் இருந்தன. ஆனால் தற்போது வந்துள்ள புதிய விதிகளின்படி ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பில் இருந்து தொகையை எடுப்பதோடு, வட்டித் தொகையையும் சேர்த்து எடுக்க EPFO நிறுவனம் அனுமதிக்கிறது.
ஓராண்டு சேவை காலம்:
பிஎப் பணத்தை எடுப்பற்கான தேவையைப் பொருத்து சேவை காலம் மாறுபடும். ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்களின் படி, அனைத்து தேவைகளுக்கும் குறைந்தபட்சம் ஓராண்டு சேவை காலமே போதுமானதாக இருக்கிறது.
இதன் காரணமாக ஓராண்டு சேவை காலம் முடிவடைந்த பிறகு சில சூழ்நிலைகளில் முழு பிஎப் பணத்தையும் எடுக்க முடியும்.
பிஎப் பணத்தை முழுமையாக எப்போது எடுக்கலாம்.?
1. வீடு கட்டுதல் அல்லது வாங்குதல்
2. திருமண செலவுகள்
3. கல்வி செலவுகள்
4. ஊழியர் அல்லது குடும்ப உறுப்பினரின் மருத்துவ செலவுகள்
5. வீட்டுக் கடனை திரும்ப செலுத்துதல் - உள்ளிட்ட முக்கிய சூழ்நிலைகளில் மட்டும் காரணம் குறிப்பிடாமல் 100% பிஎப் பணத்தை எடுக்கலாம்.
புதிய விதிகளின் மூலம் ஊழியர்கள் அடிக்கடி பிஎப் பணத்தை எடுக்க நேரிடலாம். ஆகையால் அவர்களின் வருங்கால நிதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 25% பணத்தை இருப்பு வைக்கவும் EPFO நிர்வாகம் விதிகளை வகுத்துள்ளது.
வேலையை இழந்தால்..
வேலையை இழுந்த ஒருவர் உடனே 75% பிஎப் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார். மேலும் அடுத்த ஓராண்டுக்கும் வேலையில்லாத பட்சத்தில் மீதித் தொகையையும் அவரால் எடுக்க முடியும்.
நிரந்தர உடல் ஊனம், 55 வயதில் ஓய்வு, விருப்ப ஓய்வு, பணி நீக்கம் மற்றும் வெளிநாட்டில் நிரந்தரமாக குடியேறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் பிஎப் பணத்தை 100% முழுமையாக எடுத்துக் கொள்ளலாம்.
பிஎப் பென்ஷன்:
பிஎப் பணத்தை எடுப்பதில் பல்வேறு புதிய மாற்றங்களை செய்துள்ள EPFO நிர்வாகம், பென்ஷன் திட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. அதாவது, PF திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணி புரிய வேண்டியது கட்டாயமாகும்.
பணியாளர்களின் குறுகிய கால தேவைகள் மற்றும் நீண்ட கால ஓய்வூதியப் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதே இந்த புதிய மாற்றங்களின் முக்கிய நோக்கமாகும்.