

நாட்டில் மாதச் சம்பளத்திற்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரது எதிர்காலத்தையும் சிறப்புடையதாக மாற்ற, மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) செயல்பட்டு வருகிறது. இதன்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகை பணியாளர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கூட்டு வட்டி முறையில் பெருகுகிறது.
பிஎஃப் கணககில் பென்சன் என்ற பிரிவிலும் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஊழியர் இந்த பென்சன் தொகையைப் பெற வேண்டுமானால், சில குறிப்பிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். அதாவது குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே ஒரு ஊழியரால் பிஎஃப் பென்சன் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். இதுதவிர சில பென்சன் விதிமுறைகளும் உள்ளன.
இந்த பென்சன் விதிகள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், உயிரிழந்த ஊழியர் ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தால், இருவரில் யாருக்கு குடும்ப பென்சன் தொகை கிடைக்கும் என்பது இன்று வரையிலும் பொதுமக்களுக்கு குழப்பமாகவே உள்ளது. இருப்பினும் அரசு விதிகள் இதனை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.
குடும்ப பென்சன் தொகையைப் பொருத்தவரை, அதை யார் பெற வேண்டும் என்பதில் உறவுகளுக்கிடையே தகராறு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இருப்பினும் குடும்ப பென்சன் தொகையில் யாருக்கு முழு உரிமை உண்டு என்பதை வருங்கால வைப்பு நிதி நிறுவன விதிமுறை தெளிவாக விளக்குகிறது.
10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய ஊழியர் ஒருவர் இறந்த பிறகு, அவருடைய பிஎஃப் பெனசன் தொகை மனைவிக்கு கிடைப்பது தான் வழக்கம். ஆனால் அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தால், விதிமுறைகளின் படி, முதல் உரிமை என்றும் முதல் மனைவிக்கே. ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளுக்கும் குடும்ப பென்சன் கிடைக்காது. ஆகையால் பென்சன் தொகை முதல் மனைவிக்கே கிடைக்கும்.
இரண்டாவது திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தால், முதல் மனைவி இறந்த பிறகு ஊழியரின் பெனசன் தொகை இரண்டாவது மனைவிக்கு கிடைக்கும். குடும்ப பென்சன் விவகாரத்தில் மனைவிகளின் வயதை கணக்கில் கொள்ளாமல், திருமணம் நடந்த தேதி மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
ஒருவேளை இரண்டாவது திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாமல் இருந்தால், முதல் மனைவி இறந்தாலும் இரண்டாவது மனைவிக்கு பென்சன் தொகை கிடைக்காது. அதாவது இரண்டாவது திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை எனில், குடும்ப பென்சன் தொகையை கோர இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என EPFO விதிமுறை கூறுகிறது.
பென்சன் விநியோகம் தொடர்பாக எந்தவொரு சர்ச்சையையும் தவிர்க்கவும், அரசாங்கப் பதிவுகளின்படி பணம் சுமூகமாக வழங்கப்படுவதை உறுதி செய்யவும் இந்த விதி தற்போது வரை அமலில் உள்ளது.
தற்போது பிஎஃப் பணத்தை எடுக்கும் விதிமுறைகளை மத்திய அரசு எளிமையாக்கி வருகிறது. விரைவில் ஏடிஎம் இயந்திரம் மூலமாகவே பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியும் வரவுள்ளது. இதுதவிர அனைத்து ஊழியர்களும் தங்களது பிஎஃப் கணக்கில் இ-நாமினியை நியமனம் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
இதன் மூலம் ஊழியர் இறந்த பிறகு, பிஎஃப் தொகை யாருக்கு செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே அவர் முடிவு செய்து கொள்ளலாம்.