
நாட்டில் வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) செயல்பட்டு வருகிறது. மாதச் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் தொகைக்கு கூட்டு வட்டி முறையில் மத்திய அரசு வட்டியை செலுத்துகிறது. இந்நிலையில் பிஎப் பணத்தை வாடிக்கையாளர்கள் எளிதாக அணுகும் வகையில் விதிகளைத் தளர்த்தி வருகிறது EPFO நிறுவனம்.
முன்பெல்லாம் பிஎப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் சரிபார்ப்பது கூட கடினமாக இருந்தது. ஆனால் இன்று அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டதால், பிஎப் சேவைகளை எளிதில் அணுக முடிகிறது. பிஎப் கணக்கில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் கூட ஆன்லைனில் நாமே எளிதாக செய்யும்படி வசதிகள் வந்துவிட்டன.
வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் எடுப்பது போலவே, பிஎப் பணத்தையும் ஏடிஎம்-இல் எடுப்பதற்கான வசதிகள் விரைவில் வரவுள்ளன. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தங்களது பிஎப் பணத்தைப் பயன்படுத்த அதிக சுதந்திரத்தை வழங்க வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக சில விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
குறைந்த மற்றும் நடுத்தரமான சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி பணத் தேவைகள் அதிகமாக இருக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு பிஎப் விதிகளைத் தளரத்தினால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிஎப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பென்சன் பிரிவில் சேர்ந்து விடும். பிஎப் வாடிக்கையாளர்கள் 58 வயதை எட்டிய பிறகோ அல்லது 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தாலோ மட்டும் தான் முழுப் பணத்தையும் எடுக்கும் வசதி உள்ளது.
ஆனால் தற்போது ஓய்வுக்கு முன்னரே பென்சன் பணத்தை எடுப்பதற்காக விதிகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் உள்ளிட்டத் தேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே பிஎப் பணத்தை எடுக்க முடியும். இந்த விதிகளிலும் முழுச் சுதந்திரத்தை அளிக்க EPFO நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஓராண்டுக்குள் பிஎப் விதிகளில் மாற்றம் செய்யப்படும். இது வாடிக்கையாளர்களின் பணம். அவர்கள் இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் இருப்பது சரியாக இருக்காது. இனி வாடிக்கையாளர்கள் தங்களின் பிஎப் பணத்தை தேவைப்படும் போது சுதந்திரமாக செலவழிக்க முடியும்.
3 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஒருவர் வீட்டு வசதிக்காக 90% பிஎப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருந்தால், திருமண செலவுகளுக்கு 50% மற்றும் கல்விக்கு 50% பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதில் கல்விச் செலவைப் பொறுத்த வரையில், மெட்ரிகுலேஷன் கல்விக்குப் பிந்தைய கல்விக்கு மட்டுமே பணம் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.