
இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பது குறித்து முன்னரே ரிசர்வ் வங்கி அறிவித்து விடும். அந்த வகையில், தசரா, துர்கா பூஜை, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி, தீபாவளி, சத் பூஜை என முக்கியப் பண்டிகைகள் அனைத்தும் அக்டோபர் மாதத்தில் வரிசைகட்டி வருவதால், பல மாநிலங்களில் பல நாட்கள் வங்கிகளின் பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை உள்ளது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளான அக்டோபர் 5, 12, 19, 26 ஆகிய நாட்களிலும், 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமையான அக்டோபர் 11, 25 ஆகிய நாட்களிலும் வங்கிகளுக்கு எப்போதும் போல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பண்டிகைகள் காரணமாக அக்டோபர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்பதால், ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறைகள் பட்டியல் வெளியாகிவிட்ட நிலையில், உங்கள் அவசர பணத் தேவைகள் அல்லது முக்கியப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாமல் இருக்க, இப்போதே நீங்கள் திட்டமிடுவது மிக அவசியம்!
வங்கி விடுமுறை நாட்களின் முழுவிவரம் வருமாறு:-
அக்டோபர் 1-ம்தேதி: நவராத்திரியில் முக்கிய நாளான ஆயுத பூஜை, விஜயதசமியை கொண்டாடும் தமிழ்நாடு, திரிபுரா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா உட்பட பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2-ம்தேதி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் இயங்காது.
அக்டோபர் 6-ம்தேதி: லட்சுமி பூஜையை முன்னிட்டு திரிபுரா, மேற்கு வங்கம் மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
அக்டோபர் 7-ம்தேதி: மகரிஷி வால்மீகி ஜெயந்தி, குமார பூர்ணிமாவை முன்னிட்டு கர்நாடகா, ஓடிசா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
அக்டோபர் 20-ம்தேதி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 21-ம்தேதி : தீபாவளி அமாவாசை, லட்சுமிபூஜை, கோவர்தன் பூஜை போன்ற பண்டிகைகள் காரணமாக மகாராஷ்டிரா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 22-ம்தேதி : விக்ரம் சம்வத் புத்தாண்டு, பலிபிரதிபதா பண்டிகையை முன்னிட்டு குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் இயங்காது.
அக்டோபர் 27,28: மேற்குவங்கம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சத் மஹாபர்வம் பண்டிகை கொண்டாடப்படுவதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31-ம்தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் வங்கிகள் செயல்படாது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள வங்கிகள் அக்டோபர் 1, 2, 5, 12, 19, 20, 21, 26, 11, 25 ஆகிய 10 நாட்கள் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வங்கிகளின் விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு முன்கூட்டியே செயல்பட்டால், இந்த உற்சாகமான பண்டிகைக் காலத்தை எந்த நிதிச் சிரமமும் இன்றி கொண்டாடலாம்.