

பெண்களின் தினசரி பயன்பாட்டில் மிகவும் முக்கியமான பொருள் சேப்டி பின் (Safety Pin). பெரும்பாலும் அனைத்து பெண்களுமே சேப்டி பின்னை எப்போதும் உடன் வைத்திருப்பார்கள். ஆண்களுக்கும் சில நேரங்களில் இது தேவைப்படலாம். நம்மூர் சந்தைகளில் 10 ரூபாய் கொடுத்தால் 10 பின் தாராளமாக கிடைக்கும். ஆனால் ஒரே ஒரு சேப்டி பின் விலை கிட்டத்தட்ட 69,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் உண்மை தான் பிரபல பிராண்ட் நிறுவனமான பிராடா (PRADA), இதன் விலையை 775 டாலராக நிர்ணயத்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.68,758-க்கு சமமாகும். பத்து ரூபாய்க்கே கிடைக்கும் சேப்டி பின் விலை, ஆயிரக்கணக்கில் விற்கப்படுவதால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறது
பிராடாவின் இந்த சேஃப்டி பின். மிகப்பெரிய தொகைக்கு விற்கப்படும் அந்த சேப்டி பின்னில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால், பெரிதாக ஒன்றுமே இல்லை என்பதுதான் நெட்டிசன்களின் பதிலாக இருக்கிறது.
தங்க நிற உலோகத்தால் செய்யப்பட்ட பிராடாவின் சேப்டி பின், சில வண்ண நூல்களால் சுற்றப்பட்டுள்ளது. மேலும் இதில் பிராடாவின் பிராண்ட் லோகோ மிகச் சிறிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சேப்டி பின்னில் இருக்கும் அம்சங்களே இவ்வளவு தான். அப்படி இருக்கையில் ஏன் இதன் விலை மட்டும் இவ்வளவு அதிகம் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இணையவாசிகள் பலரும் சேப்டி பின்னிற்கு நியாயமற்ற விலையை நிர்ணயித்து இருப்பதாக தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மிக இயல்பாக பலராலும் சில ரூபாய்க்கு வாங்கக் கூடிய இந்த சேப்டி பின்னை, பிரம்மாண்ட ஃபேஷன் பிராண்ட் நிறுவனமான ப்ராடா விலைமதிப்பு மிகுந்த பொருளாக மாறற முயற்சித்து வருகிறது. இதற்காக சேப்டி பின்னை ஸ்டைலிஷ் பொருட்களின் பட்டியலில் சேர்த்து விட்டது.
ப்ராடா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய “Metal Safety Pin Brooch” தங்க நிறத்தினால் செய்யப்பட்ட மின்னுகின்ற உலோக பின். இதில் சிறிய அளவில் வண்ண நூல்கள் சுற்றப்பட்டு, சிறியதாக ப்ராடா லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான விலை அமெரிக்க மதிப்பில் $775 ஆகும். அதாவது இந்திய ரூபாயில் சுமார் ரூ.68,758 ஆகும். இதன் விலையை பலரும் கிண்டலடித்து வரும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரீமியம் பிராண்டுகள் அனைத்தும் பொதுவாக தங்கம், வைரம் மற்றும் அரிதினும் அரிதான கற்கள் பொருத்தப்பட்ட பொருட்களை லட்சக்கணக்கில் விற்பனை செய்யும். ஆனால், ப்ராடா நிறுவனத்தின் இந்த சேப்டி பின் வெறும் தங்க நிற உலோகம் தான். தங்கமாக இருந்தால் கூட இந்த விலையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சேப்டி பின்னுக்கு “இந்த விலை நியாயமற்றது” என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததோடு, கிண்டல் செய்யவும் தொடங்கினர்.
இணையத்தில் கிண்டலுக்கு உள்ளான நிலையில், சேப்டி பின் தயாரிப்பு இணைப்பை சிலர் சரிபார்த்த போது, ப்ராடா வலைதளத்தில் அந்த இணைப்பு மட்டும் செயலிழந்து இருக்கிறது எனத் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டதால், உடனே அதனை வலைதளத்தில் இருந்து நீக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.