டாக்ஸி புக்கிங்கில் மெகா தில்லுமுல்லு! சிக்கியது ஓலா.! இனி 1 ரூபாய் கூட எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டாம்!

சவாரிக்கு முன்பே கட்டாய டிப்ஸ் கேட்ட தந்திரத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வைத்த செக்.
டிப்ஸ்
OLA Cabs
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

மொபைல் செயலியில் பயணத்தை உறுதி செய்வதற்கு முன்கூட்டியே, பயணிகளிடம் கூடுதலாக டிப்ஸ் கட்டணம் செலுத்துமாறு தவறாக வழிநடத்தப்பட்ட குற்றத்திற்காக ஓலா நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் டாக்ஸி புக் செய்து பயணம் செய்யும் வசதி மிகவும் எளிதாகி விட்டது. இந்தியாவில் ஓலா, ரேபிடோ மற்றும் உபெர் என பல்வேறு ஆன்லைன் டாக்ஸி செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இருந்த இடத்திலேயே டாக்ஸியை புக் செய்ய முடியும் என்பதால், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் டாக்ஸி பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும், ஓலா, ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் மொபைல் செயலியில் பயணத்திற்கு முன்பே டிப்ஸ் கேட்கும் நடைமுறையைக் கொண்டு வந்தன. டிப்ஸ் கொடுத்தால் விரைவாக டாக்ஸி கிடைக்கும் என செயலியில் காட்டப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக அதிகளவில் புகார்கள் குவிந்தன.

பயணத்திற்கு முன்பு டிப்ஸ் கேட்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஓலா நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு, ரூ.10 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இதே டிப்ஸ் புகாருக்காக ரேபிடோ நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஓலா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்திற்கான காரணம்:

பொதுமக்கள் ஆட்டோ அல்லது கார் உள்ளிட்ட வாஙன சேவையை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, கூடுதல் டிப்ஸ் (Tips) செலுத்தினால் வெகு விரைவாக சவாரி கிடைக்கும் என்ற ரீதியில் அறிவிப்புகள் தோன்றும். ரூ.20 இல் தொடங்கி ரூ.50 மற்றும் அதிகபட்சமாக ரூ.499 வரை டிப்ஸ் கட்டணங்கள் செயலி திரையில் தோன்றும்.

இந்த அறிவிப்புகள் வாடிக்கையாளரை மன ரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாக்கி, தவறாக வழிநடத்துவதாக புகார்களின் மூலம் நுகர்வோர் ஆணையம் கண்டறிந்தது. இதனால் அவசரமாக செல்ல வேண்டி புக் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் டிப்ஸ் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

ஓலா நிறுவனத்தின் வாதம்:

பயணத்தின் போது டிப்ஸ் வழங்குவது வாடிக்கையாளர்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது என்றும், சவாரி ஒதுக்கீடு செய்வதில் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் ஓலா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

ஓலா
OLA Cabs
இதையும் படியுங்கள்:
இன்ப அதிர்ச்சி.!! நம்பவே முடியல... 4 நாட்களில் ரூ.4,480 சரிந்த தங்கம்.! ரூ.5,000 சரிந்த வெள்ளி.!
டிப்ஸ்

மத்திய நுகர்வோர் ஆணையம் மறுப்பு: டிப்ஸ் கட்டணம் குறித்து டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் தரவுகளை ஆய்வு செய்தது ஆணையம். இதில் டிப்ஸ் வழங்காதவர்களுக்கு 68% சவாரிகள் கிடைத்ததையும், டிப்ஸ் கொடுத்தவர்களுக்கு 32% - 39% சவாரிகள் மட்டுமே கிடைத்ததையும் சுட்டிக்காட்டி ஓலாவின் வாதத்தை நுகர்வோர் ஆணையம் நிராகரித்தது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் படி, சவாரி உறுதி செய்யப்படுவதற்கு முன்பு டிப்ஸ் கேட்கும் அம்சத்தை ஓலா நிறுவனம் உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதோடு 15 நாட்களுக்குள் ரூ.10 லட்சம் அபராதத் தொகையை செலுத்தி விட்டு, அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் இனி சவாரிக்கு கார் அல்லது ஆட்டோ புக் செய்யும் போது முன்கூட்டியே டிப்ஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இதையும் படியுங்கள்:
என்னது... கனவையும் வீடியோவா பார்க்கலாமா? உலகையே மிரள வைத்த புதிய ஏஐ!
டிப்ஸ்