

துபாய் நாட்டில் ராணுவ வீரர் ஒருவருக்கு லாட்டரி சீட்டில் 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு கிடைத்துள்ளது. இதுநாள் வரை கடனில் சிக்கியிருந்த ராணுவ வீரருக்கு, லாட்டரியில் விழுந்த பரிசுத்தொகை நிமமதியை அளித்துள்ளது.
ஷார்ஜாவில் வசிக்கும் ராணுவ வீரர் அஹ்மத் அல் ஜுனைபி என்பவருக்கு 4 பெண் மற்றும் 4 ஆண் குழந்தைகள் உள்பட 8 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு துபாய் பணமதிப்பில் சுமார் 10 லட்சம் திர்ஹாம் வீட்டுக் கடன் இருக்கிறது. தற்போது லாட்டரியில் பணப் பரிசு கிடைத்துள்ளதால், வீட்டுக் கடனை அடைத்து விட்டு, மீதமுள்ள பணத்தில் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு செலவிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட துபாய் டியூட்டி ஃப்ரீ (DDF) மில்லேனியம் மில்லியனேர் டிராவில், ஷார்ஜாவைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு கிடைத்தது. இதன் மூலம் கடினமான தனது வாழ்க்கையில், இறுதியாக நிம்மதி பெற உள்ளார் இந்த ராணுவ வீரர்.
43 வயதான அஹ்மத் அல் ஜுனைபி என்ற ராணுவ வீரர், கடந்த நவம்பர் 27 ஆம் தேதியன்று ஆன்லைனில் சீரிஸ் 526, 0193 என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். இந்த டிக்கெட் தான் தற்போது இவரது வாழ்க்கையை வெற்றிக் கொண்டாட்டமாக மாற்றியுள்ளது.
துபாயில் உள்ள UAE இராணுவத்தில் பணிபுரியும் அஹ்மத் அல் ஜுனைபி, மிகவும் கடினமான சூழலில் தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். வாழ்க்கையில் எப்போது அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதற்கேற்ப பல ஆண்டுகளாக கடனில் சிக்கித் தவித்த ராணுவ வீரருக்கு, இன்று அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது.
லாட்டரி சீட்டில் வென்றது குறித்து ராணுவ வீரர் கூறுகையில், “எனக்கு லாட்டரி சீட்டில் வெற்றி கிடைக்க பல முறை முயன்றுள்ளேன்; இதற்காக நிறைய பிரார்த்தனையும் செய்தேன். அல்ஹம்துலில்லாஹ்! நான் எப்போதும் சொல்லக்கூடியது இதுவே. கடந்த 4 ஆண்டுகளாக துபாய் டியூட்டி ஃப்ரீ (DDF) புரமோஷன்களில் பங்கேற்று வரும் நான், புதிய வீட்டை கட்டிய போது ஏற்பட்ட வங்கிக் கடனைத் தான் முதலில் தீர்ப்பேன்.
வங்கிக் கடன் ஒரு சிறிய தொகை இல்லை. 1 மில்லியன் திர்ஹாமுக்கு மேல் உள்ளது. புதன்கிழமை மாலை வரையிலும், நான் என் குடும்பத்தாருக்கு இந்த நல்ல செய்தியை சொல்லவில்லை. இந்த சந்தோஷத்தில் இருந்து மீண்டு வரவே எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. என்னுடைய 4 குழந்தைகளுக்கும் நல்ல பரிசைக் கொடுக்க வேண்டும். அவர்களுக்காக புதிய கார்கள் வாங்கலாம் என்று நினைக்கிறேன். மேலும் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கும் செலவிட விரும்புகிறேன்” என அவர் மகிழ்சசியுடன் தெரிவித்தார்.
மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட தற்போது 10 பேர் கொண்ட இவரது குடும்பம், பல ஆண்டுகளாக 2 பழைய கார்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இந்த கார்களை மாற்றுவது, அவர்களின் அன்றாட வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 1999 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த மில்லேனியம் மில்லியனேர் புரமோஷனில், வெற்றி பெற்ற 18வது எமிராத்தி ஆவார் அல் ஜுனைபி.