
இந்தியாவில் மிகக் குறைந்த கட்டணத்தில் எளிதாக பயணிக்க பலரும் இரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் இரயில்களில் குறைந்த அளவிலான பெட்டிகள் தான் முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் பொதுமக்கள் பலரும் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்கும் பயணியர்களின் எண்ணிக்கையை குறைக்க இரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நடப்பாண்டில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவுக்குச் செல்ல ஏராளமான பக்தர்கள் இரயில் நிலையங்களில் குவிந்தனர். அந்நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் தற்போது முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்க வேண்டும் என்ற திட்டத்தை இந்தியன் இரயில்வே கொண்டு வர முடிவெடுத்துள்ளது.
இதன் சோதனை முயற்சியாக தற்போது புதுடெல்லியில் முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் வெற்றியைப் பொறுத்து இத்திட்டம் நாடு முழுக்க அமல்படுத்தப்படும் எனவும் இரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக முன்பதிவில்லாத பெட்டிகளில் எத்தனை பேர் பயணிக்க வேண்டும் என்ற விதிமுறை இரயில்வே நிர்வாகத்திற்கு இல்லை. இதன் காரணமாக எண்ணற்ற டிக்கெட்டுகளை விநியோகம் செய்கின்றனர்.
ஒரு முன்பதிவில்லாத இரயில் பெட்டியில் 70 முதல் 80 சீட்டுகள் இருக்கும். இந்நிலையில் இரயில்வேயின் இந்தக் கட்டுப்பாடு பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக அமையும். இரயில் புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் அனைத்து இரயில் பெட்டிகளிலும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்தே தட்கல் டிக்கெட் முறையிலும் கடந்த ஜூலை 15 முதல் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி தட்கல் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண்ணுடன் ஓடிபி சரிபார்த்தலும் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைத்தரகர்களின் செயல்பாட்டைக் குறைக்க அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் மூலமாக மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும் போன்ற அறிவிப்புகளை இரயில்வே நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில், முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே விநியோகம் செய்யப்படும் என்ற திட்டத்தையும் முன்னெடுத்து தொடர்ந்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது இரயில்வே.