வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலைப் பார்த்தால் போதும், மீதமுள்ள மூன்று நாட்களுக்கு லிவ் என்ற புது விதியை கொண்டுவருகிறது ஒரு நாடு. இதற்கான காரணத்தையும் அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
சாதாரணமாக 6 நாட்கள் வேலை ஒருநாள் ஓய்வு என்ற கணக்கில்தான் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். சில நிறுவனங்கள் மட்டுமே இரண்டு நாட்கள் விடுமுறை தரும். மேலும் சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை என்ற பெயரில் 7 நாட்களும் வேலை தருகின்றனர்.
தங்களுடைய நிறுவனங்களின் நிலையை மட்டும் சொல்லி, வேலை செய்பவர்களின் நிலையை கருத்தில்கொள்ளாத எத்தனையோ நிறுவனங்களுக்கு நடுவில், சில நிறுவனங்கள் பணியாளர்களின் நிலையையும் கருத்தில் கொள்கின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் இதனை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் பணியாளர்களின் மன ஆரோக்கியத்தையும் உடல் நலனையும் கவனத்தில் கொண்டு, அவர்கள் மூலமே தங்கள் வேலைகளை தரமாக வாங்கிக்கொள்கிறார்கள். இது நிறுவனங்களின் எண்ணம். ஆனால், ஒரு நாடே இத்தகைய பணி சுமையை குறைக்கத் திட்டமிட்டிருக்கிறது என்றால், நிச்சயம் அது நாட்டின் நலனுக்காகத்தான் இருக்கும்.
ஆம்! டோக்கியோவில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சரிவடைந்தே வருகிறது. இது அந்த நாட்டின் மக்கள் தொகையை பெரிதும் பாதிக்கிறது.
ஜப்பானில் 100 வயதைக் கடந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவுள்ளது. 28 சதவிகிதம் பேர் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.
பிறப்பு விகிதம் குறைந்து முதியோர்களின் எண்ணிக்கை அதிகமானால், அது அந்த நாட்டின் சமநிலையை கெடுத்துவிடும். மேலும் முதியவர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளால் அதிக பணத்தை செலவழிக்க வேண்டியதாக இருக்கும்.
ஆகையால் அந்த நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் விதமாக சில நடவடிக்கைகளை கொண்டுவரவுள்ளனர். அதன் முதல்படியாக வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் அதிக நேரம் வேலை செய்யும் கலாச்சாரம் இருக்கிறது. உலக வங்கியின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு ஜப்பானில் 72 சதவீத ஆண்களும் 55 சதவீத பெண்களும் பணிக்கு செல்வதாக கூறப்படுகிறது. இந்த விகிதம், அதிக வருமானம் ஈட்டும் நாடுகளை விடவும் மிக அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினரைப் பார்க்காமல், வேலை வேலை என்று இருப்பதால்தான் பிறப்பு விகிதம் குறைகிறது என்று கணிக்கின்றனர்.
சென்ற ஆண்டு வெறும் 7 லட்சத்து 27 ஆயிரத்து 277 பிறப்புகள் மட்டுமே பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.