
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இதன் பின்னரே 'அமராவதி' என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் அஜித்குமார் சினிமா பின்புலம் இல்லாமல் பெரும் கஷ்டங்களை கடந்து தற்போது முன்னணி கதாநாயகனாக திகழ்கிறார்.
இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். கார் பிரியரான அஜித்குமார், பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
2010-ம் ஆண்டு நடந்த, அன்றைய முதலமைச்சர் பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது, அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் தன்னை பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அஜித், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்ற கொள்கையை இன்று வரை கடைபிடித்து வருகிறார். பல்வேறு அரசியல் நிகழ்வுகளுடன் இவர் தொடர்பு படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியே இருந்து வருகிறார்.
இவரது ரசிகர்கள் சில சமயங்களில் நடந்து கொள்ளும் விதம் பலருக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இவரது ரசிகர்கள் பொது இடங்கள், அரசியல் கூட்டங்கள், என அனைத்து இடங்களிலும் 'கடவுளே அஜித்தே' என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர். இந்த கோஷம் பலரையும் எரிச்சலடைய வைத்துள்ளது.
மேலும் பொது இடங்களில் ‘கடவுளே... அஜித்தே...' கோஷம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படி பொது இடங்களில் எழுப்பப்பட்டு வரும் கோஷம், நடிகர் அஜித்குமாரை கவலையடைய செய்துள்ளது. இதுதொடர்பாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்:-
‘‘பொது இடங்களில் ‘கடவுளே அஜித்தே...' என கோஷமிடக் கூடாது'' என்றும், ‘‘சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்'' என்றும் அஜித்குமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"சமீபகாலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க... அஜித்தே...' என்ற இந்த கோஷம், என்னை கவலையடைய செய்துள்ளது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை.
எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே பொது இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை அன்புடன் வேண்டுகிறேன். மேலும் என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்து கொள்ளுங்கள். சட்டத்தை மதிக்கும் குடிமக்களாகவும் இருங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்" என்று அஜித்குமார் கூறியுள்ளார்.
அஜித்குமார் ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை கலைத்ததும், தன்னை ‘தல' என்று அழைக்க வேண்டாம் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி', ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி'படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.