
தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்கும்போது சில வழிமுறைகளை கையாள வேண்டும். அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி மேலே சென்று வெடிக்கும் ராக்கெட், அவுட் போன்ற பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகள் விற்பது விற்பனையாளர்களின் ஒத்துழைப்புடன் தடை செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறி உபயோகித்து அதனால் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசுகளை நடு வீதியில் வைத்து வெடிப்பது ஆபத்து.
பட்டாசு கடை வியாபாரிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்டுள்ள பட்டாசுகளை வாங்கி வைத்திருக்கவோ அல்லது விற்கவோ கூடாது. அப்படி தடையை மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. அதிலிருந்து எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், பெரியோர்கள் மற்றும் நோயாளிகள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
ஐகோர்ட்டு உத்தரவின்படி பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழக அரசு 2018-ம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
எனவே, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடனிருப்பது பாதுகாப்பானது. குடிசை பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாக கொண்டாட வேண்டும்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகை இன்று (20-ந்தேதி) முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தமிழர்களும், 2-வது நாள் வடமாநிலத்தினரும், 3-வது நாள் கன்னட மக்களும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
தீபாவளியையொட்டி கர்நாடகத்தில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், அரசு அனுமதித்த இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் பெங்களூருவில் 72 இடங்களில் பட்டாசுகளை விற்க மாசு கட்டுப்பாட்டு வாரியமும், அரசும் அனுமதி வழங்கியுள்ளது. அதை தவிர்த்து சட்டவிரோதமாக பட்டாசுகளை விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் போலீசார் சட்டவிரோதமாக யாராவது பட்டாசுகளை வாங்கி சேமித்து வைத்து இருக்கிறார்களா என்றும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த கண்காணிப்பு வருகிற 22-ந்தேதி வரை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த சோதனையின் போது எந்த கடையிலாவது பசுமை பட்டாசுகளை தவிர்த்து தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பது கண்டறியப்பட்டால், அந்த கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதுடன், கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும், அதுபோல் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கண்டறிய 10 மீட்டர் தூரத்தில் ஒலி அளவிடுகளையும் அதிகாரிகள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். 125 டெசிபல் அளவுக்கு மிகாமல் ஒலி இருந்தால் அது பசுமை பட்டாசு என்றும், அந்த அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்பினால் அது தடை செய்யப்பட்ட பட்டாசுகள் என்றும் அதிகாரிகள் வழிமுறை வெளியிட்டுள்ளனர். இதை மீறி பட்டாசுகள் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.