
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவரங்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெறப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய இராணுவத்தின் வீரதீர செயலை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (National Center of Educational Resources Development) அடுத்தாண்டு தயாரிக்கவுள்ள பாடப்புத்தகங்களில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்திய இராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவரங்கள் முழுமையாக 8 முதல் 10 பக்கங்கள் வரை இரண்டு பகுதிகளாக இடம்பெறவுள்ளன.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். நம் நாட்டுப் பெண்களின் குங்குமத்தை அழித்த கயவர்களுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டுவோம் என பிரதமர் மோடி உறுதியளித்தார். அதற்கேற்ப யாரும் அறியாத நள்ளிரவு நேரத்தில் 9 பாகிஸ்தான் முகாம்களை குறி வைத்து தகர்த்தது இந்திய இராணுவம். இந்தத் தாக்குதலுக்கு இந்திய விமானப்படையும் உதவியது. இந்தியாவின் இந்தத் தாக்குதலுக்கு ‘ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் இராணுவத்தின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்தத் தாக்குதலில் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோம்கா சிங் ஆகிய இரண்டு பெண் வீராங்கனைகளும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் இராணுவத்தின் வலிமையை இந்தியா மீண்டும் ஒருமுறை உலக நாடுகளுக்கு நிரூபித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெறவிருப்பது உண்மையில் நற்செய்தியாகும். இதன்படி 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஒரு பகுதியாகவும், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரு பகுதியாகவும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்கள் இடம்பெறவுள்ளன. இந்திய நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க இராணுவம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகள், தூதரகம் ரீதியாக எடுக்கப்பட்ட முயற்சிகள், இந்திய இராணுவத்தின் பலம் மற்றும் வீரர், வீராங்கனைகளின் தைரியம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படவுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் தவிர்த்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்த முதல் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் தகவல்களும் இடம்பெறவுள்ளன. ஆக்ஸியம் ஸ்பேஸ் விண்வெளி நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ் இவர் விண்வெளிக்கு பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான ‘மிஷன் லைஃப்’ திட்டத்தின் தகவல்களும் பாடப்புத்தகங்களில் இடம்பெறவுள்ளன.