
இன்று ஜூலை 26 இந்திய இராணுவத்தின் சார்பில் 26வது கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்படுகிறது. எண்ணற்ற இந்திய வீரர்களின் தியாகத்தால் உருவான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி தான் 1999 இல் பாகிஸ்தானை வென்று, கார்கில் பகுதியைக் கைப்பற்றியது. 26 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், நாட்டிற்காக இரத்தம் சிந்திய இராணுவ வீரர்களின் புகழ் இன்றும் உச்சத்தில் இருக்கிறது.
ஒருகாலத்தில் நட்பு நாடுகளாக இருந்த இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று எதிரெதிர் துருவங்களில் நிற்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு இரு நாடுகளும் காஷ்மீரை தங்களுடன் இணைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டன. பாகிஸ்தான் பழங்குடியின இஸ்லாமியர்களின் உதவியோடு சில பகுதிகளைப் கைப்பற்றின. இதுதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.
பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணையவே, பாகிஸ்தான் போர்த் தொடுக்கத் தொடங்கியது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 1947 அக்டோபர் மாதத்தில் முதல் போர் நடைபெற்றது. இதனைத் தடுக்கும் விதமாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலையிட்டு சமாதான முயற்சிகளை மேற்கொண்டது.
1965 இல் காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நுழைய முயற்சித்தது. இதற்கு தக்க பதிலடி கொடுத்தது இந்தியா. கிட்டத்தட்ட 17 நாட்கள் நடந்த இப்போரில் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. அடுத்ததாக 1971 இல் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டது. இந்தப் போரின் முடிவில் தான் வங்காளதேசம் என்ற ஒரு புதிய நாடு உருவானது.
இந்தியா பாகிஸ்தான் போரில் மிகவும் முக்கியமானது கார்கில் போர். கடந்த 1999 இல் பாகிஸ்தான் இராணுவம் கார்கில் மலைப்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்தது. இந்தியா இந்தப் போரில் பாகிஸ்தானை வீழ்த்தவும், கார்கிலை பாதுகாக்கவும் ‘ஆப்ரேஷன் விஜய்’ எனப் பெயர் வைத்து தனது இராணுவப் படையை அனுபிப்யது. இந்திய இராணுவத்திற்கு விமானப் படையும் உதவியாக இருந்தது.
இந்த இடம் போர் செய்வதற்கு உகந்தது அல்ல. ஏனெனில் 16,000 அடி உயரத்தில் மலைமீது போர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய இராணுவம் இருந்தது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பாகிஸ்தானை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தி முன்னேறிச் சென்றனர் இந்திய இராணுவ வீரர்கள். பல இராணுவ வீரர்கள் தங்கள் உயிரை நாட்டிற்காக அர்ப்பணித்தனர்.
எங்கு பார்த்தாலும் துப்பாக்கிச் சூடு சத்தம் தான். குண்டுகள் வீரர்களின் உடலைத் துளைத்தன. 2 மாதங்கள் நடைபெற்ற கார்கில் போரில், இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது. இந்தப் போரில் இந்திய வீரர்கள் சுமார் 500 பேரும், பாகிஸ்தான் வீரர்கள் 4,000 பேரும் உயிரிழந்தனர்.
இறுதியாக இந்திய வீரர்கள் கார்கில் பகுதியை ஜூலை 26 இல் கைப்பற்றி, மலை உச்சியில் இந்திய தேசியக் கொடியை நட்டனர். இந்த நாளைத் தான் ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாக கொண்டாடுகிறோம்.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்றும் கூட எண்ணற்ற இராணுவ வீரர்கள் நாட்டைக் காக்க எல்லையில் கடுங்குளிரில் நெஞ்சுயர்த்தி நிற்கின்றனர். கார்கில் வெற்றி தினமான இன்று அனைத்து இராணுவ வீரர்களுக்கும் சல்யூட் அடிக்க வேண்டியது இந்திய குடிமகன்கள் அனைவரது கடமையாகும்.