

தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை 4 முனைப்போட்டிக்கே அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையேதான் போட்டி. ஆனால், யார் அணியில் யார் இருப்பார்கள் என்பது தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடியும்போதுதான் தெரியவரும்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனும் வரும் பொங்கல் அன்று விஜய்யின் தவெக கட்சியில் இணைய உள்ளதாக பல சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது உண்மையா அல்லது வதந்தியா என்று அனைவரும் குழம்பியிருந்த நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ், டிடிவி தினகரனும் மறுப்போ, உறுதிபடுத்தவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோர் விஜய்யுடன் இணைந்தால் அவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எண்ணுகின்றனர்.
சமீபத்தில் தவெகவில் செங்கோட்டையன் இணைந்த பின்பு, அதிமுகவில் இருந்து மேலும் பலர் இணைவார்கள் என தெரிவித்திருந்தார். அதன்படி நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரும் தவெகவில் இணந்தனர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜே.சி.டி.பிரபாகர், நேற்று (ஜன.2) தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ஓபிஎஸ்ஸின், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தில் இருந்து விலகி, தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்தார். இதனை பார்க்கும் போது கண்டிப்பாக ஓபிஎஸ் வரும் பொங்கல் அன்று விஜய்யின் தவெக கட்சியில் இணைவார் என்பது உறுதிபடுத்தும் வகையில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றன.
ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்திருப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களையும், விஜய் ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே அதிமுக தனது தேர்தல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதிமுக முன்னணி நிர்வாகிகள் வெற்றிப்பெற முடியாது என்பதுடன் 25 தொகுதிகள் வரை பறிபோகும் நிலை இருப்பதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளதால் அப்செட்டான இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்திருப்பதை பார்க்கும் போது ஒபிஎஸ் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இப்படி இருக்கும் நிலையில் இபிஎஸ் அழைத்தால் ஒபிஎஸ் அதிமுகவிற்கு செல்வாரா அல்லது தவெகவிற்கு செல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மற்றொரு புறம் திமுக அரசு அகற்றப்பட, டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.