

சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில், வாக்குப்பதிவு நாளன்று தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், தினக்கூலி மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI)அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் வரும் ஏப்ரல் 9-ம்தேதி, கேரளாவில் 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், புதுச்சேரியில் 30 இடங்களுக்கு ஒரு கட்டமாகவும், அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு ஒரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி மற்றும் 29-ம்தேதி என இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 135B-இன் படி, தேர்தல் நடைபெறும் நாட்களில் அந்தந்த மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக, அசாம், கேரளா, புதுச்சேரி, கோவா, கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 9-ம்தேதியும்; தமிழ்நாடு, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 23-ம்தேதியும்; மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 (முதல் கட்டம்) மற்றும் ஏப்ரல் 29 (இரண்டாம் கட்டம்) ஆகிய தேதிகளிலும் இந்த விடுமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்கெடுப்பு நடைபெறும் நாளில் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என்றும், இந்த உத்தரவை மீறி, ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாகத் தமிழகத்தில், இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கவும், அவர்கள் தடையின்றி வாக்களிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையைச் சுதந்திரமாகவும், வசதியாகவும் பயன்படுத்திக்கொள்வதை உறுதி செய்வதற்கான அவசியமான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்துகையில், ‘தங்கள் சட்டமன்றத் தொகுதிக்கு வெளியே அமைந்துள்ள தொழில் அல்லது வணிக நிறுவனங்களில் பணிபுரியும் (தற்காலிக மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் உட்பட) வாக்காளர்கள், வாக்கெடுப்பு நடைபெறும் தொகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தால், அவர்களும் வாக்கெடுப்பு நாளில் வாக்களிப்பதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறும் உரிமை உடையவர்கள் ஆவர்’ என்று கூறியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி என 5 மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய முக்கிய அரசியல் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.