

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மே 10-ம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.
தமிழக தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். அதன்படி வரும் ஏப்ரல் 23-ம்தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவின் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதிச் செய்யும் வகையில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
சுமார் 25 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், நகர்ப்புரங்களில் 30,967 வாக்குச்சாவடிகள், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், தெளிவான சின்னங்கள், தன்னார்வலர்களின் உதவி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,200 வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து வாக்குச்சாவடிகளும் கேமராக்களால் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்க அவர்களுக்கு நேரடி முன்னுரிமை வழங்கப்படும். மேலும் நடக்க சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி வசதியும், அவர்கள் தடையின்றி வாக்குச்சாவடிக்குள் செல்ல சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோல் வாக்குச்சாவடிகளின் வெளியே மொபைல் போன்களை ஒப்படைக்கும் வசதி ஏற்படுத்தப்படும். வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் செல்வதற்கு முன்பு தங்களின் மொபைல் போன்களை அங்கு ஒப்படைத்துவிட்டு, பின்னர் வாக்களித்து விட்டு வெளியே வந்து தங்களின் மொபைல் போன்களை பெற்றுக்கொண்டு செல்லலாம்.
இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் கலர் போட்டோக்கள் மற்றும் பெரிய எழுத்துக்கள் இடம்பெறும் என்று தெரிவித்தார்.
மேலும் வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் பிரசாரம் செய்வதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றி வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதும் சட்ட விரோதமாகக் கருதப்படும்.
இத்தகைய ஏற்பாடுகள் மூலம் அனைத்து வாக்காளர்களும் எளிதாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்ய ஆணையம் முழு அக்கறை செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு மக்கள் வாக்களிக்க ஏதுவாக மாநிலம் முழுவதும் வரும் ஏப்ரல் 23-ம்தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இவ்விடுமுறை பொருந்தும் என்றும் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
17.4 கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் இந்தத் தேர்தல் திருவிழா, இந்தியாவின் ஜனநாயக வலிமையை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்ற உள்ளது.