
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே அடிக்கடி போர்கள் நடப்பதும், எல்லையில் பதட்டமான சூழல் நிலவுவதும் வாடிக்கையாகி விட்டது. நடப்பாண்டில் கூட பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் பஹல்காம் என்ற சுற்றுலா தளத்தில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு தக்க பதிலடி தரும் வகையில் சிந்து நதி நீரை நிறுத்தியதோடு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை அழித்தது இந்தியா. இந்நிலையில் சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதனைத் தகர்ப்போம் என பாகிஸ்தான் இராணுவ தளபதி மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்கு சென்ற பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிம் முனீர், அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்தியா சிந்து நதியில் அணையைக் கட்டினால், நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சிந்து நதி ஒன்றும் இந்தியர்களின் சொத்து அல்ல. இரு நாட்டுக்கும் சம பங்குண்டு. சிந்து நதியில் இந்தியா எப்போது அணையைக் கட்டும் என்று தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அணையைக் கட்டிய பிறகு 10 ஏவுகணைகளால் அணையைத் தாக்கி துவம்சம் செய்வோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியா அமெரிக்கா இடையே தற்போது வரி ரீதியிலான வர்த்தகப் போர் தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இந்தியப் பொருட்களுக்கு 50% வரிவிதிப்பை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவ தளபதி பேசியிருப்பது உலக நாடுகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவிடம் இருந்து அச்சுறுத்தல் வந்தால், உலகின் பாதி நாடுகளை அழிக்கவும் தயார் என்ற தொனியில் பாகிஸ்தான் இராணுவ தளபதி பேசியிருக்கிறார்.
ஏற்கனவே இந்தியாவை எதிர்த்து வெற்றி பெற முடியாமல் பாகிஸ்தான் இராணுவம் பலமுறை பின்வாங்கியுள்ளது. அதோடு பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது இந்தியா. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அந்நாட்டு மக்களை நம்ப வைத்துள்ளதாக சில தகவல்கள் நேற்று வெளியாகின. இந்நிலையில் பாகிஸ்தானின் மிரட்டல் விடுக்கும் தொனி, இந்தியாவிடம் செல்லாது என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் பாகிஸ்தான் அரண்டு போயிருக்கிறது. இதனால் தான் கடந்த சில நாட்களாக இந்தியாவை எதிர்க்கும் விதமாக தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் கருத்துகளை கூறி வருகிறது.