ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் சில இடங்களில் சரமாரியாக பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில உலக நாடுகளில் இப்போதுதான் போர் சற்று ஒய்ந்திருக்கிறது. அதற்குள் மேலும் சில நாடுகள் ஒன்றுக்கொன்று தாக்கிக்கொள்கின்றன. அந்தவகையில் ஆஃப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் திடீரென்று நள்ளிரவில் வான்வழி தாக்குதலை நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.
இதேபோல்தான் நேற்று முன்தினம் நள்ளிரவில் 7 இடங்களில் பாகிஸ்தானின் விமானப் படையின் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிலையில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், சிலர் காணாமல் போனதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதலால் பர்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியே முழுவதுமாக அழிந்துவிட்டதாம். வஜிரிஸ்தானி அகதிகளை குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆஃப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள், வஜிரிஸ்தான் அகதிகள் இறையான்மையுடன் சுய உரிமையுடன் தங்கள் நிலத்தில் வாழ உரிமை கொண்டவர்கள் என்று தெரிவித்ததோடு, இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்துள்ளது.
சமீபக்காலங்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் தலிபான்கள் என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள்தான் ஆதரவு தருகிறது என்பதுதான் பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. இந்த பயங்கரவாதிகளை குறிவைத்துதான் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
மக்களின் நிலங்கள், இறையாண்மை ஆகியவற்றை பாதுகாப்பது தங்களின் கடமை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. அதே நேரத்தில் அதிரடி தாக்குதலை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாலிபான் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்திருக்கிறது. இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கிவிடுமோ ? என்பதுதான் உலக நாடுகளின் பேரச்சமாக உள்ளது.