

பாலிவுட்டில் பெருவெற்றி பெற்ற துரந்தர் திரைப்படத்தின் இரண்டாவது பாகமான துரந்தர் தி ரிவெஞ்ச், சில தினங்களுக்கு முன் வெளியாகி பாக்ஸ் ஆபீஸை புரட்டி போட்டு வருகிறது. இதன் முதல் பாகம் ₹1350 கோடி வசூலித்து பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், இரண்டாம் பாகத்தின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. வெளியான 6 நாட்களில் ₹917 கோடி வசூலைக் குவித்து வரலாறு காணாத அளவில் பெரும் சாதனைகளை செய்து வருகிறது.
ரன்வீர் சிங், சஞ்சய் தத், வினோத் கண்ணா, அர்ஜூன் ராம்பால், சாரா அர்ஜூன், ராகேஷ் பேடி ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படத்தை, ஆதித்யா தர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் பாகிஸ்தானுக்கு சென்று அங்கேயே தங்கி, அங்குள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் ஒரு இந்திய ரா ஏஜென்ட்(இந்திய உளவு அமைப்பு) பற்றிய திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டது.
இந்த திரைப்படம் முழுக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளை பற்றியும், அவர்களை எப்படி எல்லாம் இந்தியாவின் ஏஜென்ட் பழி வாங்கினார் என்பதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரபலமாக இருந்த பல்வேறு தீவிரவாத குழுக்களும், அவர்களின் தலைவர்களைப் பற்றிய பல்வேறு குறிப்புகளும் இந்த திரைப்படம் முழுக்க காட்சிகளாக வருகின்றன. பாகிஸ்தானில் செல்வாக்கு பெற்ற தீவிரவாத குழுவில் நுழைந்து, மற்றவர்களின் நம்பிக்கையும் பெற்று யாருக்கும் தெரியாமல் ஒவ்வொருவராக இந்திய உளவாளி கொன்று பழிவாங்கிக் கொண்டு வருகிறார். இதில் அந்த உளவாளிக்கு ஆதரவாக இருக்கும் இன்னொரு நபரும் இந்திய உளவாளி என்ற விஷயம் இறுதியில் தான் தெரியும்.
நான்கு மணி நேரம் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தில் எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல், திரைக்கதை மிகவும் பரபரப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதையின்படி இந்திய உளவாளிகள் ஏராளமாக பாகிஸ்தானில் ஊடுருவியுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அடிக்கடி தீவிரவாதக் குழு தலைவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்படுவது தொடர்கதை ஆகியுள்ளது. மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மிகத் துல்லியமாக கையாண்டது.
அப்போது இந்தியா தொடங்கிய தாக்குதல் ஒவ்வொன்றும் தீவிரவாத குழுக்களின் இருப்பிடங்களை மட்டுமே குறிவைத்து தகர்த்து வந்தது. இந்தியாவிற்கு துல்லியமான தகவல்களை அனுப்பியது வெளியிலிருந்து அவ்வளவு சாத்தியமல்ல, தங்கள் குழுவிற்குள் யாரோ ஒரு உளவாளி இருக்கக் கூடும் என்ற அச்சம் பாகிஸ்தானை வாட்டியது.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதையைப் போல தற்போது துரந்தர் 2 திரைப்படம் அவர்களை அதிக அளவில் பயமுறுத்துகிறது. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பாகிஸ்தானில் உளவாளியாக இருந்தபோது, பிச்சைக்காரர் வேடத்தில் நீண்ட காலம் இருந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி இருந்தது. இது போன்ற விஷயங்கள் பாகிஸ்தானின் தூக்கத்தை கெடுத்துவிட்டது. இந்த திரைப்படத்தின் தாக்கத்தினால் பாகிஸ்தான் அவசரமாக சந்தேக நபர்களை எல்லாம் விசாரித்து வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தெருக்களிலும் வசிக்கும் சாலையோர வாசிகளை எல்லாம் அந்த நாட்டு போலீஸ்காரர்கள் சோதனை செய்து வருகின்றனர். அது அதுமட்டுமல்லாமல் சாலைகளில் தூங்கும் பிச்சைக்காரர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் பிடித்து சோதனை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு பயந்து பலரும் ஓட்டம் பிடிக்கின்றனர், சந்தேகப்படும் நபர்களை காவல்துறை இழுத்து செல்கிறது. பாகிஸ்தானின் இந்த சோதனையை வீடியோவாக எடுத்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு திரைப்படம் பாகிஸ்தானின் தூக்கத்தையே தொலைக்க வைத்து விட்டது.