

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருந்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள முருகனின் சிலை நவபாசாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது.
இந்த கோவிலில் வரும் ஜனவரி 26-ம்தேதி(திங்கள் கிழமை) தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் ஆறாம் நாளான ஜனவரி 31-ம்தேதி சுவாமி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிந்து முருகனுக்கு விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் போன்ற முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.
இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் முருகனை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட பல மணிநேரம் ஆகிவிடும். ஆனால் அதுவே முருகனுக்கு உகந்த தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
அந்த வகையில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ம்தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து பழனி முருகனை தரிசனம் செய்ய வருவார்கள். இங்கு, சுவாமி தரிசனத்துக்கு கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது இலவச பொது தரிசன வழி, ரூ.20, ரூ.100 கட்டணங்கள் தரிசன வரிசை உள்ளது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பல மாவட்டத்தில் உள்ள தேசிய, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் வழியாக பழனி முருகன் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வருகிற ஜனவரி 31 மற்றும் பிப்.1,2 ஆகிய மூன்று நாட்களுக்கு பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இதனால் அனைத்து பக்தர்களும் இலவசமாக பொது தரிசனத்தில் சென்று முருகனை தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பழனி முருகனை தரிசனம் செய்யும் வழியிலும் கோவில் நிர்வாகம் சார்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் தைப்பூசத்தின் போது பக்தா்கள் சந்நிதி சாலை வழியாக கயிறு கட்டி நிறுத்தி குழுக்களாகப் பிரித்து குடமுழுக்கு நினைவரங்கம் வரை சென்று பின் மலையேற அனுமதிக்கப்படுவா். ஆனால் இம்முறை பக்தா்கள் பூங்கா சாலையில் செல்ல வழி அமைக்கப்பட்டு, கோவில் தலைமை அலுவலகம் உள்ள திசையில் தடுத்து நிறுத்தப்பட்டு குழுக்களாகப் பிரித்து மலையேற அனுமதிக்கப்படுவா்கள் என்றும் இதேபோல, தரிசனம் முடித்து வெளியில் வரும் பக்தா்கள் சந்நிதி சாலை, அய்யம்புள்ளி சாலை வழியாக வழக்கம்போல செல்லலாம் எனவும் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.