

உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் (ஜூலை 20) செப்டம்பர் 14-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி மலைக் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரோப் கார் நிலையத்தில் மாதந்தோறும் மற்றும் ஆண்டுதோறும் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டிற்கான வருடாந்திர சீரமைப்பு பணிகள் இன்று தொடங்கின.
ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தாலும், சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மலைக் கோவிலை அடையப் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது:
படிவழிப் பாதை (693 படிக்கட்டுகள்)
யானைப் பாதை
மின்இழுவை இரயில் (Winch Train)
கிரிவலப் பாதை (2.4 கி.மீ தூரம் கொண்ட சுற்றளவு)
பழனி மலையின் சுவாரஸ்ய தல வரலாறு :
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 150 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த திருத்தலம், ஆன்மீக முக்கியத்துவமும் சுவாரஸ்யமான வரலாறும் கொண்டது.
ஞானப்பழம் தந்த கோபம்:
நாரதர் சிவபெருமானிடம் அளித்த ஞானப்பழத்தை முழுமையாக பெற, முருகனும் விநாயகரும் உலகைச் சுற்றி வரும் போட்டியில் பங்கேற்றனர். விநாயகர் பெற்றோர் சிவ-பார்வதியை உலகம் எனச் சுற்றி வந்து பழத்தை பெற்றார். இதனால் கோபமுற்ற முருகன், தன் வாகனமான மயிலில் உலகை வலம் வந்து, இறுதியில் இந்த சிவகிரி மலையில் வந்து தங்கிவிட்டார்.
பின்னர், சிவபெருமானும் பார்வதியும் நேரில் வந்து, ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை "பழம் நீ" என்றதால் இந்த இடம் பழநி என பெயர் பெற்றது.
காவடி வழிபாட்டின் தொடக்கம்:
அகஸ்தியரின் உத்தரவுப்படி சிவகிரி, சக்திகிரி என்ற இரு மலைகளைக் காவடி போல சுமந்து வந்த இடும்பன், ஓய்வெடுக்க மலையைக் கீழே வைத்தான். மலையில் முருகன் அமர்ந்திருந்ததால், அவனால் மீண்டும் மலையை தூக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட போரில் இடும்பன் மாண்டான். பின்னர் இடும்பனை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டான் முருகன். இடும்பனை போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்கு சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தான். இன்றும் மலை ஏறும் வழியில் இடும்பனுக்கு கோவில் உண்டு.
தீராத நோய். வழக்கு பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று. மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபட சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
வாழ்வில் போட்டி, பொறமை, கஷ்டம்,தடை போன்ற பல பிரச்சனைகள் விலக ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனியாண்டவர் முருகனை தரிசனம் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும்
பழனி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் இருக்கும் போது தரிசனம் செய்தால் நம்மை ஆண்டியாக ஆக்கி விடுவார் என்றும்,ராஜ அலங்காரத்தில் இருக்கும் போதும் மட்டுமே தரிசனம் செய்தால் ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்றும் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தீராத துயரத்தை அனுபவித்து வந்தால், அதிகப்படியான தடைகள் உங்களுடைய வாழ்க்கையில்இருந்தால் நீங்கள் பழனி முருகனை தண்டாயுதபாணி கோலத்தில் அதாவது ஆண்டி அலங்காரத்தில் தரிசிப்பது தான் சிறந்தது
பெண்ணிற்கு கல்யாணம், வீடு வாங்குவது, விற்பது,கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிட போகிறோம் என இது போன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.