

புகழ்பெற்ற பழனி ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தது தொடர்பாக , பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சார் பதிவாளர் கைதினை தொடர்ந்து தற்போது இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.
பழனி ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் அதன் மடத்திற்கு சொந்தமான 1.4 ஏக்கர் நிலம், தற்போது சுமார் ₹100 கோடி மதிப்பு கொண்டது. இந்த நிலத்தினை தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக, ₹2 கோடிக்கு பத்திர பதிவு செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. அதன் பின்னர் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த வழக்கு தீவிரமானதால் காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடியால் நடத்தப்பட்ட விசாரணையில், கோவில் நிலத்தின் மதிப்பு போலியான ஆவணங்களைக் கொண்டு மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆவணங்களில் ஏராளமான முரண்பாடுகள் மற்றும் விதிமுறை மீறல்கள் இருந்தன. விசாரணையின் ஆரம்ப காலகட்டத்திலேயே சில தனிநபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது.
விசாரணையை தொடர்ந்து இதற்கு முன்னர் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் , இந்த மோசடியில் பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கும் தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டது. இவரே வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜஸ்டின் மணிகண்டன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழக அரசு அவரை பணியிடை நீக்கம் செய்தது, மேலும் அவரது வீடு மற்றும் அவருக்கு சம்பந்தமான பல இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து அவர் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். அதனால் , நிபந்தனையுடன் அவரிடம் விசாரணை தொடர்ந்தது.
ஆதாரங்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் ஜஸ்டின் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்தனர். நேற்று அவரது முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதையடுத்து அவர் தலைமறைவானார். அவரை தேடிய சிபிசிஐடி போலீசார் இன்று மாலை கொடைக்கானல் சாலையில் அவரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விசாரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு கோயில் சொத்துக்களை முறைகேடாக ஆக்கிரமிப்பவர்கள் மீதும், சட்டவிரோதமாக கோவில் சொத்துக்களை அபகரிப்பவர்களின் மீதும் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி கொடுத்துள்ளது. பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், என்று சிபிசிஐடி போலீஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.
தற்போது பழனி கோயில் நிலமோசடி வழக்கு தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற மோசடி ஒரு கோயிலில் மட்டும் நடந்துள்ளதா? அல்லது பல்வேறு கோயில் சொத்துக்களையும் இதுபோன்று நிலமோசடி செய்து அபகரித்துள்ளனரா? என்று பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.