பழனி பக்தர்களுக்கு குட் நியூஸ்..!ஆன்லைன் 'ரோப்கார்' முன்பதிவு தொடக்கம்!

உலகப்புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் ரோப்கார், வின்ச் சேவை டிக்கெட்டுகளை ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கியது.
பழனி ரோப்கார்
palani temple rope carimage credit-palani.in, @secret_temples
Updated on

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பின்படி, உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு டிஜிட்டல் சேவைகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதற்கட்டமாக இன்று முதல் ரோப்கார் ஆன்லைன் முன்பதிவுப் பயணம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற முருகன் கோவில்களில் முதன்மையான கோவில் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் தான். இந்த கோவிலுக்கு தமிழகத்தை தாண்டி கேரளா மற்றும் வெளியூர்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். குறிப்பாக (ஆடி) கிருத்திகை, தைப்பூசம், செவ்வாய்கிழமை, கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் பழனி முருகப் பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளூரில் இருந்தும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருவார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை, அலகு குத்தி முருகனை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் கோவிலில் உள்ள தங்கரதம், தங்கத்தொட்டில் சேவைகளிலும் பங்கெடுத்து வழிபடுகின்றனர். இதற்காக கோவில் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள முதல்நிலை கோவில்களில் பக்தர்கள் எளிதான முறையில் சேவைகளை பெறுவதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பழனி முருகன் கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் காத்திருப்பு அறை மற்றும் ரோப் கார் சேவை குறித்து பலர் புகார்கள் தெரிவித்ததையடுத்து கோவிலில் உள்ள குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்படும் என்று பக்தர்களிடம் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கால பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு வசதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, மின்இழுவை ரெயில் அதாவது 'வின்ச்' (Winch) சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி நேற்று தொடங்கிய நிலையில், ரோப் கார் சேவைக்கான ஆன்லைன் முன்பதிவை இன்று முதல் செய்யலாம் என்று பழனி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி முருகன்
பழனி முருகன்

இதன்படி பக்தர்கள் எளிதில் ரோப் கார் மூலம் கோவிலுக்கு சென்று வரலாம். ரோப் கார் முன்பதிவிற்கு நாளொன்றுக்கு 100 நபர்கள் ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும், மலை மீது எளிதாகச் செல்லவும் பக்தர்கள் இந்த டிஜிட்டல் முன்பதிவு சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்காக கோவில் இணையதளத்தில் சென்று ஒதுக்கீடு செய்த நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் பக்தர் ஒருவருக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்றுவர ரூ.100 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
பழனி செல்லும் பக்தர்களுக்கு அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் அபராதம்!
பழனி ரோப்கார்

முன்பதிவு செய்தவர்கள் நாள்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 50 பேரும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை 50 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி முன்பதிவு செய்தவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் பயணிக்க உள்ளனர்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டண தரிசனம், தங்க ரத புறப்பாடு, தங்கத் தொட்டில் மற்றும் அர்ச்சனை டிக்கெட்டுகளையும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்.

அதேபோல் கோவிலில் தினசரி நடைபெறும் 6 கால பூஜையில் கலந்து கொள்வதற்கான முன்பதிவு வசதியும் தற்போது சோதனை முறையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு பூஜைக்கு 5 டிக்கெட் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விரைவில் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கான அறைகளும் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் தொடங்கப்பட உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்களின் வசதிக்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகள், பழனிக்கு வரும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆன்மீகமும் அறிவியலும்: பழனி பஞ்சாமிர்தத்தின் ரகசியங்கள்!
பழனி ரோப்கார்

பழனி முருகன் கோவிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்தவும், டிக்கெட் முன்பதிவு செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை (அல்லது கோவில் இணையதளத்தை) பக்தர்கள் பார்வையிடலாம்.

logo
Kalki Online
kalkionline.com