15 மாதங்களாக இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நடந்து முடிந்த நிலையில், தற்போது அங்கிருந்து வெளியேறிய பாலஸ்தீனர்கள் மீண்டும் தங்களது நாட்டிற்கே திரும்புகின்றனர்.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருந்து வருகிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டத்தால், தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது.
தொடர்ந்து 15 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த போரினால், பாலஸ்தீன மக்கள் பஞ்சம், பட்டினி மற்றும் போர் காரணமாக சித்ரவதைகளை அனுபவித்து வந்தனர். நோய் மறுபுறம் மக்களை காவு வாங்கியது.
இவற்றிற்கு பயந்தும் குண்டுகளுக்கு பயந்தும் பாலஸ்தீன மக்கள் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.
இந்த சமயத்தில்தான் சமீபத்தில் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. முதற்கட்டமாக 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது. அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பணயக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. இன்னும் ஒரு பெண் கைதியை ஹமாஸ் விடுவிக்கவில்லை.
இதனால், கோபமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்றும், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
இதனால், 6.5 லட்சம் பாலஸ்தீன மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்காக காத்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், ஹமாஸ் 6 பணய கைதிகளை இரண்டாம் கட்டமாக அனுப்பி வைப்பதாக தெரிவித்தது. இஸ்ரேல் காசா மக்களை உள்ளே அனுமதிக்க ஒப்புக்கொண்டது.
இப்படியான நிலையில், இன்று காலை 7 மணியளவில் பாலஸ்தீனியர்கள் நெட்சாரிம் பாதை வழியாக கால்நடையாக கடக்க அனுமதிக்கப்பட்டனர்.