

பான் கார்டு (PAN Card)என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க எண்களைக் கொண்ட ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். அதாவது PAN கார்டு என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட ஒரு அத்தியாவசிய அதிகாரபூர்வ ஆவணமாகும். வங்கி பரிவர்த்தனை, வருமான வரி செலுத்துதல் போன்ற நிதி சார்ந்த தேவைகளுக்கு இது கட்டாயமாகும்.
இந்நிலையில் மத்திய வருமான வரித்துறை பான் கார்டு தொடர்பான விதிமுறைகளில் மிக முக்கிய மாற்றங்களை 2026-ம் ஆண்டு புதிய வருமான வரி விதிகளின் கீழ் (Income Tax Rules 2026) கொண்டு வந்துள்ளது. இது வரி முறையை மேலும் வெளிப்படையானதாக மாற்றுவதையும், பெரிய நிதிப் பரிவர்த்தனைகள் மீதான கண்காணிப்பை அதிகரிப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் இந்த புதிய விதிமுறைகளின்படி, வங்கி கணக்கு வழியாக செய்யப்படும் சில பணப் பரிவர்த்தனைகளுக்கு இனி பான் கார்டு தேவைப்படாது. அதே நேரத்தில், அதிக மதிப்புள்ள சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு வழங்குவது முற்றிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு தேவையில்லாத 8 முக்கிய பரிவர்த்தனைகள் (PAN Relaxed Transactions):
* அந்த வகையில் வங்கிகளில் சாதாரண சேமிப்பு கணக்கு (Basic Banking), ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் (Jan Dhan accounts) அல்லது நடப்பு கணக்குகளைத் தொடங்குவதற்கு இனிமேல் பான் கார்டு கேட்கப்படாது.
* வெளிநாட்டு நாணயக் கொள்முதல், வங்கி வரைவோலைகள் மற்றும் சில ப்ரீபெய்ட் பணம் செலுத்துவது தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு இனி பான் கார்டு அவசியமில்லை.
* வங்கிகளில் புதிய ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகளுக்குவிண்ணப்பிக்கும் போது பான் கார்டு அவசியமில்லை.
* ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் அல்லது சேவைகளை வாங்குவதற்கு பான் கார்டு (PAN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக, இதுபோன்ற பெரிய செலவினங்களைக் கண்காணிக்க அரசு விரும்புகிறது.
* தபால் கணக்குகளில் (Post Office Savings) சிறிய முதலீடுகள் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கு பான் கார்டு சமர்ப்பிக்கும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
* குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட ரொக்க வைப்புக்கு (Cash Deposits) பான் கார்டு இனிமேல் கேட்கப்படாது.
* வாடிக்கையாளர் கணக்கு புதுப்பித்தலுக்கு ரீ-கேஒய்சி (Re-KYC) போது பான் எண் சமர்ப்பிப்பதில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
* சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு, அதாவது வாலெட்டுகள் மற்றும் யுபிஐ போன்ற தளங்களில் சாதாரண வரம்புகளுக்குள் நடக்கும் பணப் பரிமாற்றங்களுக்கு பான் அவசியமில்லை.
* பெரிய அளவில் அல்லாத சிறு சேமிப்பு பத்திரங்கள் வாங்குவதற்கு பான் விலக்கு ஏற்று கொள்ளப்படுகிறது.
பான் கார்டு எவற்றுக்கெல்லாம் முற்றிலும் கட்டாயம்? (PAN Mandatory):
* பல முதலீடு தொடர்பான விஷயங்களில் பான் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் டிமேட் கணக்கைத் திறப்பதற்கும், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கும், ரூ.50,000-க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பத்திரங்களில் முதலீடு செய்வதற்கும் பான் கார்டு அவசியமாகும்.
* ஆண்டிற்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பணம் எடுக்கும் (Cash Withdrawal Limit)போதும், ஒரு நிதியாண்டில் வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்குகளில் இருந்து ஒட்டுமொத்தமாக (Cumulative) ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பணம் எடுக்கும்போதும் பான் கார்டு விவரங்களை குறிப்பிடுவது கட்டாயமாகும். இந்த ரூ.10 லட்சம் என்பது ஒரே முறையில் எடுக்கப்படும் பணம் அல்ல. ஒரே நிதியாண்டில் நீங்கள் பலமுறை எடுக்கும் பணத்தின் மொத்த கூட்டுத்தொகையாகும்.
* நிலம், வீடு அல்லது வணிக வளாகங்கள் போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் போதோ (Property Transactions)அல்லது விற்கும் போதோ பான் கார்டு விவரங்கள் கட்டாயமாகும்.
* இதுவரை பான் கார்டு இல்லாதவர்கள் பெரிய பரிவர்த்தனைகளின் போது ஃபார்ம் 60 (Form 60) படிவத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, இந்த ஃபார்ம் 60 முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஃபார்ம் 97 (Form 97) என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-புதிய பான் கார்டு விதிமுறைகள் சாமானிய மக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இனிமேல் பான் இல்லாமல் பெரிய நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்வது கடினமாக இருக்கும்.
இந்த நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில், கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நிதிப் பரிவர்த்தனைகளையும் பான் கார்டுடன் இணைப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கக்கூடும் என்றே தெரிகிறது..