இனி ‘கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தால் லைசென்ஸ் ரத்து – ஆட்சியர் உத்தரவு..!

பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்த நிலையில் தற்பொழுது பெட்ரோல் நிலையங்களுக்கு பொதுமக்கள் வருகை குறைந்த‌து.
ban on sale of petrol in bottles
ban on sale of petrol in bottles
Published on

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து வருவதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பின் காரணமாக ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் வகைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், உணவுகளின் விலையும் உயர்ந்துள்ளது. சில ஓட்டல்களில் சமையலுக்கு பயன்படுத்தும் கியாசுக்கும் சேர்த்து பில் போட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி, வணிக சிலிண்டர், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு போன்ற சூழல் பெட்ரோல்-டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட போவதாகவும், இதனால் பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.500 வரை விலை ஏறும் என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வைரலானது. அதை உண்மை என்று நம்பிய மக்கள், முண்டியடித்துக் கொண்டு அன்று இரவே பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர்.

இதையும் படியுங்கள்:
எகிறும் பெட்ரோல், டீசல் விலைக்கு கடிவாளம் போடும் அமெரிக்கா.! டிரம்ப் அதிரடி அறிவிப்பு.!
ban on sale of petrol in bottles

ஒரேநேரத்தில் லாரிகள், கார்கள்,பைக், ஆட்டோக்களும் குவிந்ததால், பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டதுடன், 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் மற்றும் பாட்டில்களிலும் பெட்ரோல் மற்றும் டீசலை அதிகமாக வாங்கி செல்ல ஆரம்பித்தனர்.

பல பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதங்கள் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் சார்பிலும் பெட்ரோல்-டீசல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினரும் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை. எனவே பொதுமக்கள் அது தொடர்பாக பீதியடைந்து பெட்ரோல் நிலையங்களில் மொத்தமாக குவிய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனாலும் பீதி குறையாத மக்கள் நேற்று 3-வது நாளாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களில் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகிறார்கள்.

இதற்கிடையே பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு தேவையான அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யலாம் என்றும் கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல்-டீசலை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். இதனை அனைத்து பெட்ரோல் நிலைய உரிமையாளர்களும் முழுமையாக கடைபிடிக்க தொடங்கி உள்ளனர் என்றார்.

ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாத பொதுமக்கள், பல இடங்களில் பெட்ரோல் நிலைய ஊழியர்களுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டு அடம்பிடித்து அதிகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் கேன், கேனாக வாங்கி சென்றனர். பொட்ரோல் தட்டுப்பாடு இல்லை என்று ஊழியர்கள் எடுத்துக்கூறியும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து பெட்ரோலை வாங்கி சென்றனர். பாதுகாப்பற்ற முறையில் பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோலை எடுத்துச்செல்வது ஆபத்தானது.

பெட்ரோல் அதிக ஆவியாகும் தன்மை கொண்டது. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வாங்கும் போது ஏற்படும் அழுத்ததால் சிறு உராய்வு ஏற்பாட்டாலும் பாட்டில் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. வாகனங்களில் பாட்டில்களை வைத்து செல்லும் போது இன்ஜின் சூடு அல்லது வெளிப்புற வெப்பம் காரணமாக எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது.

இதற்கிடையே விழுப்புரத்தில் தண்ணீர் கேன்களில் பெட்ரோல் விநியோகித்த நிலையத்தை தற்காலிகமாக மூட பாரத் பெட்ரோலியம் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியானதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், பெட்ரோல் பங்குகளில் வாகனங்களில் மட்டுமே எரிபொருள் நிரப்பப்பட வேண்டும்.

அதைத் தவிர்த்து கேன்களில் வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அரசின் உத்தரவை மீறி செயல்படும் பெட்ரோல் நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு கேட்டுள்ளதையடுத்து பெட்ரோல் நிலையங்கள் சிலவற்றில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கூறும்போது, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. வாகனங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. எனவே, வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் போடுவதற்கு முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் கேன்களை தூக்கிக் கொண்டு பெட்ரோல் நிலையங்களுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. பற்றாக்குறை எதுவும் இல்லை. சில இடங்களில் அச்சத்தில் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டதால் பெட்ரோல் நிலையங்களில் தற்காலிகமாக விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என பொதுமக்களிடம் இந்தியன் ஆயில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! மும்பை வந்தடைந்தது முதல் கச்சா எண்ணெய் கப்பல்! இனி பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது..!
ban on sale of petrol in bottles

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் பங்க்கில் நிரம்பி வழிந்த பொதுமக்கள் கூட்டம், பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்த நிலையில் தற்பொழுது பெட்ரோல் நிலையங்களுக்கு பொதுமக்கள் வருகை குறைந்த‌து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com