புக்கிங் கட்டணம் ரூ.1,285.. ஆனால் பில்லோ ரூ.5,662: இணையத்தில் வைரலாகும் ‘Ola’ சர்ச்சை..!

ஓலா செயலி மூலம் புக் செய்யப்பட்ட வாடகை கார் பயண முடிவில் குறிப்பிட்டத் தொகையை விட பல மடங்கு அதிகமாக வசூலித்ததாக பயணிகள் சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஓலா மோசடி
ஓலா மோசடி
Updated on

இந்தியாவில் ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற பயணச் செயலிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் அவசர தேவைக்காக பேருந்து, ரெயில் போன்ற பொது போக்குவரத்திற்கு காத்திருக்காமல் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் மூலம் ஆட்டோ, கார், பைக் போன்ற வாடகை வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாய், ரேபிடோ போன்ற செயலிகள் கொண்டு வந்த பைக் டேக்ஸி (Bike Taxi)சேவைகளும், செயலிகள் மூலமான ஆட்டோ முன்பதிவும் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் விரைவாகச் செல்ல உதவியதால், நடுத்தர மற்றும் இளைஞர்களிடையே இவற்றின் பயன்பாடு அசுர வளர்ச்சி அடைந்தது.

சமீபகாலமாக ஓலா மற்றும் உபெர் போன்ற செயலிகளில் வாடகை வாகனங்களை முன்பதிவு செய்யும்போது, "முன்பண டிப்ஸ் (Advance Tip) வழங்குங்கள்", "கூடுதல் தொகையைத் தேர்வு செய்யுங்கள்" அல்லது "டிப்ஸ் அளித்தால் வாகனம் விரைவில் உறுதி செய்யப்படும்" என்ற பெயரில் குறுஞ்செய்திகள் காட்டப்பட்டு வந்தன. இதன் காரணமாக, கூடுதல் கட்டணம் செலுத்தாத பயணிகளின் கோரிக்கைகளை ஓட்டுநர்கள் நிராகரிப்பதாகவும், அவசரத் தேவையின் போது பயணிகள் மறைமுகமாக அதிகக் கட்டணம் செலுத்த வற்புறுத்தப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் டெல்லியில் 6 மணிநேர வாடகை கார் (Ola Cabs) சேவைக்கு தொடக்க கட்டணமாக ரூ.1,285 காண்பிக்கப்பட்ட நிலையில், பயண முடிவில் ரூ.5,662 கட்டணம் (ஓலா மோசடி) வசூலிக்கப்பட்டதாகப் பயணிகள் குழு ஒன்று சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டு குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்தை அவர்கள் ‘Ola மோசடி, உதவி தேவை’ (Ola scam, need help) என்ற தலைப்பில் சமூகவலைதளத்தில் பதிவிட, அது தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது.

கட்டண ரசீதின் ஸ்கிரீன்ஷாட்டில் (screenshot), சுங்கக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுக்கு மேலதிகமாக, 240.5 கிலோமீட்டர் தூரத்திற்கான கூடுதல் கட்டணமும் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அந்தப் பயணி ‘நாங்கள் காலை 10 மணிக்கு Ola Cabs மூலம் 6 மணி நேரத்திற்கு (60 கி.மீ) ஒரு காரை முன்பதிவு செய்தோம்; மஹிபால்பூரில் உள்ள எங்கள் ஹோட்டலில் இருந்து நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு யஷோபூமியில் இறக்கிவிடப்பட்டோம்’ என்று கூறினார்.

பின்னர் அந்த பயணிகள் குழுவினர் பிற்பகல் 3:45 மணி வரை கண்காட்சியில் கலந்துகொள்ள யஷோபூமியில் இருந்தனர், பின்னர் அங்கிருந்து விமானத்தைப் பிடிக்க அதே காரில் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று இறங்கினர். அதன் பிறகு ஓட்டுநர் அவர்களிடம் கேட்ட மொத்தக் கட்டணத்தைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்..

‘டாக்ஸியை முன்பதிவு செய்தபோது காட்டப்பட்ட அடிப்படை கட்டணம் ரூ. 1,285 ஆக இருந்தது; எனவே, அதே அளவிலோ அல்லது அதைவிடச் சற்று அதிகமாகவோ கட்டணம் இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.

Ola bill|ஓலா மோசடி
Ola bill|ஓலா மோசடிimage credit-@ndtv

ஆனால், ஓலா (Ola) செயலியில் மொத்தக் கட்டணம் நான்கு மடங்காக அதிகரித்து ரூ. 5,662 ஆக உயர்ந்ததுடன், கூடுதலாக 250 கி.மீ தூரத்திற்கான கட்டணமும் எங்களிடம் வசூலிக்கப்பட்டது. அது எப்படி என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை’ என்றார்.

"Ola-வின் உதவிப் பிரிவைத் தொடர்புகொள்ள முயன்றோம்; ஆனால் வார இறுதி நாள் என்பதால், அந்தக் குழுவைச் சேர்ந்த யாரையும் எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் பகிருங்கள் என்று அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில், சமூக ஊடகப் பயனர்கள் அந்தப் பயணிகளின் நிலையைப் புரிந்துகொண்டு, பலரும் தங்களுக்கு நடந்த இதுபோன்ற சம்பவங்களைப் பகிர்ந்து தீர்வுகளைப் பரிந்துரைத்துள்ளனர். மேலும் அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து Ola நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி பணத்தைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தினர்.

ஒரு பயனர் ‘நீங்கள் கண்காட்சியில் இருந்த நேரத்தில் ஓட்டுநர் காரை வேறு எங்கோ ஓட்டிச் சென்றுள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், "டெல்லி விமான நிலையத்திலிருந்து Ola-வில் சென்றபோது எனக்கும் இதேபோன்ற மோசடி நடந்தது.

இதையும் படியுங்கள்:
இனி அதிக கட்டணம் இல்லை! ஓலா, ஊபர் கட்டணங்களுக்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயம்..!
ஓலா மோசடி

அனைத்து விவரங்களையும் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்; அத்துடன் 'Support and Safety' (உதவி மற்றும் பாதுகாப்பு) போன்ற பிரிவின் மூலம் அவர்களைத் தொடர்புகொள்ள முயலுங்கள், அவர்கள் உடனடியாகப் பதிலளிப்பார்கள்," என்று குறிப்பிட்டார்.

இன்னொரு பயனர். ‘உங்கள் கூகுள் மேப்ஸ் டைம்லைன் (Google Maps Timeline) ஆதாரத்தை வைத்து, நீங்கள் அந்த காரில் பயணம் செய்யவில்லை என்பதையும் ஓட்டுநர் தனியாகச் சென்றுள்ளார் என்பதையும் நிரூபிக்கலாம்’ என்று யோசனை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
‘டிப்ஸ் கொடுத்தாதான் சவாரியா?’ - Ola, Uber,Rapido செயலிகளுக்கு செக் வைத்த மத்திய அரசு!
ஓலா மோசடி

நான்காவது நபர், ‘Uber-ம் எனக்கு இதுபோன்று நடந்தது. நான் Twitter-ல் அந்தப் பிரச்சினையைக் குறிப்பிட்டு அவர்களை 'டேக்' (tag) செய்தேன். ஓட்டுநர் தேவையற்ற அல்லது நீண்ட பாதையில் வண்டியை ஓட்டிச் சென்றிருந்தார். இறுதியில் எனது Uber வாலட்டில் (wallet) பணம் திரும்பக் கிடைத்தது’ என்று தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com