

மத்தியப் பிரதேசத்தில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் விற்பனை செய்த ஒரு தொகுதி பசு நெய்யை (பதஞ்சலி நெய்) உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அம்மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) உத்தரவிட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, அந்த நெய் மாதிரி பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்டதாக, அந்நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் (Patanjali Foods Limited) என்பது இந்தியாவின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் (FMCG) மற்றும் சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இது புகழ்பெற்ற பதஞ்சலி ஆயுர்வேத் (Patanjali Ayurved) குழுமத்தின் துணை நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் பெரும் பகுதி வருவாய் சமையல் எண்ணெய்களில் (சோயாபீன் எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில்) இருந்தே கிடைக்கிறது. அதுமட்டுமின்றி நெய், தேன், பிஸ்கட், நூடுல்ஸ், அரிசி, பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் சத்துணவுப் பொருட்கள் (Nutraceuticals) ஆகியவற்றைத் தயாரித்து விற்பனை செய்கிறது.
இந்நிலையில் தான் மத்தியப் பிரதேச உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (MP FDA), பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட தொகுதி (Batch) பசு நெய் மாதிரிகளைப் பரிசோதித்ததில் அது தரமற்று (பாதுகாப்பற்றதாக) இருப்பதாகக் கூறி, அந்த நெய் தொகுதியை சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரில் இருந்து சேகரிக்கப்பட்ட பதஞ்சலி பசு நெய் மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அது 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஒழுங்குமுறை 2011'-ல் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்பதை FDA அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட ஈயத்தின் (Lead) அளவு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு, இது பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த தயாரிப்புகளை உடனடியாக சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (MP FDA) நியமிக்கப்பட்ட அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவிருப்பதாக பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட தொகுப்பின் மதிப்புக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர, இந்தத் திரும்பப் பெறுதல் நடவடிக்கையால், தங்களின் நிதி அல்லது செயல்பாடுகளில் வேறு எந்தப் பொருள்சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிஎஸ்இ-யில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1 சதவீதத்திற்கும் மேல் சரிந்து, ரூ.351-ல் வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்துள்ளன.
பதஞ்சலி ஃபுட்ஸ் தயாரிப்புகளின் தரம் குறித்து குற்றச்சாட்டுகள் எழுவது இது முதல் முறையல்ல.
இதே போன்ற ஒரு சம்பவம் இந்த ஆண்டு ஜூன் மாதம் கேரளாவில் நடந்தது. பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்த சோள மாவில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்ததை கண்ணூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அதன் விளைவாக, அந்தத் தொகுதியின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
முக்கிய உணவு ஒழுங்குமுறை ஆணையங்கள் நாடு முழுவதும் பெரிய உணவுப் பாதுகாப்பு மீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளன. சமீபத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), '100%' எனக் கூறப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை மெஸ்ஸர்ஸ் டாபர் இந்தியா லிமிடெட் (M/s Dabur India Limited) உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தகைய முத்திரைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (விளம்பரம் மற்றும் கூற்றுகள்) ஒழுங்குமுறைகள், 2018-ஐ மீறுவதாக அது கூறியுள்ளது. தேன், ஆப்பிள் சைடர் வினிகர், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய், இளநீர், தேங்காய்ப் பால் மற்றும் இதேபோன்ற "100%" கூற்றுகளைக் கொண்ட பிற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு டாபர் தயாரிப்புகளுக்கு இந்தத் தடை பொருந்தும் என்று அந்த ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கலப்படம் செய்யப்பட்ட உணவுகளுக்கு எதிரான தனது மாநில அளவிலான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் நடவடிக்கையின் விளைவாக, பல லிட்டர் அளவிலான சந்தேகத்திற்கிடமான சீம்பால், பால் பொருட்கள் மற்றும் வெண்ணெய், கோவா, பன்னீர், நெய், ஸ்ரீகண்ட் உள்ளிட்ட இனிப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.