

சந்தையில் கலப்பட மற்றும் போலி பொருட்கள் பெருகி வரும் இந்த காலத்தில், நாம் வாங்கும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது முக்கிய கடமையாகும்.
பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) எண் இல்லாதது நுகர்வோரின் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய எச்சரிக்கை அறிகுறியாகும்.
பேக் செய்யப்பட்ட பாக்கெட் உணவுகளில் அச்சிடப்பட்டிருக்கும் 14 இலக்க FSSAI எண், அந்த உணவு தயாரிப்பு நிறுவனம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் முறையாகப் பதிவு செய்து அல்லது உரிமம் (License) பெற்று இயங்குகிறது என்பதற்கான பிரத்யேக அடையாள எண் ஆகும்.
14 இலக்க FSSAI எண் அச்சிடப்பட்ட உணவுப் பொருட்கள், அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகிறது. போலி மற்றும் தரமற்ற பொருட்களால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் இருந்து இது நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்கிறது.
இந்த 14 இலக்க FSSAI எண் வெறும் எண்கள் அல்ல. இதில் அந்த நிறுவனத்தின் உரிம வகை, மாநிலம், பதிவு செய்யப்பட்ட ஆண்டு போன்ற 5 முக்கியத் தகவல்கள் மறைந்துள்ளன.
அதன் விவரம் இதோ:
முதல் இலக்கம்: ஒப்புதல் வகை (1 = உரிமம், 2 = பதிவு). அதாவது 1-வது இலக்கம் எண் 1 என்று தொடங்கினால் அது 'உரிமம்' (License) பெற்ற நிறுவனம். 2 என்று தொடங்கினால் அது 'பதிவு' (Registration) செய்யப்பட்ட நிறுவனம் ஆகும்.
2-வது மற்றும் 3வது: மாநிலம் / யூனியன் பிரதேசக் குறியீடு. தயாரிப்பு நிறுவனம் எந்த மாநிலத்தில் இயங்குகிறது என்பதைக் குறிக்கும் (உதாரணமாக, தமிழ்நாட்டிற்கு 33, மத்திய அரசின் உரிமம் என்றால் 00).
4வது மற்றும் 5வது: வழங்கப்பட்ட ஆண்டு. எந்த வருடத்தில் இந்த உரிமம் (Year of Issue) வழங்கப்பட்டது என்பதைக் குறிக்கும் (உதாரணமாக, 26 என்றால் 2026-ம் ஆண்டு).
6, 7 மற்றும் 8-வது இலக்கங்கள்: அதிகார அமைப்புக் குறியீடு (Authority Code). எந்த குறிப்பிட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி அல்லது அலுவலகப் பிரிவின் கீழ் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும்.
கடைசி 6 இலக்கங்கள் (9 முதல் 14 வரை): உரிமதாரரின் தனித்துவமான அடையாள எண்(Unique FBO ID). அந்த உணவு வணிக நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்பட்ட பிரத்யேக அடையாள எண் ஆகும்.
நுகர்வோரை ஏமாற்றுவதற்காக சில போலியான நிறுவனங்கள் ஏதேனும் ஒரு 14 இலக்க எண்ணையோ அல்லது காலாவதியான எண்ணையோ பாக்கெட்டுகளில் அச்சிட வாய்ப்புள்ளது. எனவே, அதைச் சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.
பாக்கெட் உணவுகளில் அச்சிடப்பட்டுள்ள 14 இலக்க FSSAI (உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) எண் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை ஆன்லைனில் மிக எளிதாகக் கண்டறிய முடியும்.
ஆன்லைனில் FSSAI எண்ணைச் சரிபார்ப்பது எப்படி?
அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் எந்தவொரு கட்டணமும் இன்றி, ஒரு நிமிடத்திற்குள் நீங்கள் இதைச் சரிபார்க்கலாம். அதற்கு கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:
வழிமுறை 1: FoSCoS இணையதளம் மூலம் சரிபார்த்தல்
முதலில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ உணவுப் பாதுகாப்பு இணையப் பக்கமானfoscos.fssai.gov.in என்ற தளத்திற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள "FBO Search" (Food Business Operator Search) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
பேக்கேஜிங்கின் மீது, பொதுவாக பின்புறம் அல்லது பக்கவாட்டில் இருக்கும் FSSAI சின்னத்தைத் தேடி, அதன் அருகில் அச்சிடப்பட்டுள்ள 14 இலக்க எண்ணைக் குறித்துக்கொள்ளுங்கள்.
இப்போது உணவு பாக்கெட்டில் உள்ள 14 இலக்க FSSAI எண்ணை (FSSAI License / Registration Number) அங்குள்ள கட்டத்தில் உள்ளிடவும். அடுத்து 4. பாதுகாப்பு குறியீட்டை (Captcha) உள்ளிட்டு, "Search" அல்லது "Submit" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
வழிமுறை 2: மொபைல் செயலி மூலம் சரிபார்த்தல்:
உங்களிடம் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் இருந்தால், கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து அரசின் அதிகாரப்பூர்வ "Food Safety Connect" செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள 'Check FSSAI License Number' பிரிவில் 14 இலக்க எண்ணை உள்ளிட்டும் சரிபார்க்கலாம்.
முடிவு உண்மையானதா, போலியானதா என அறிவது எப்படி?
தேடலுக்குப் பிறகு உங்கள் திரையில் தோன்றும் விபரங்களைக் கொண்டு போலி மற்றும் உண்மையான எண்களைப் பிரித்தறியலாம்:
* அந்த எண் உண்மையானதாக (Valid) இருந்தால், திரையில் அந்த உணவுத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் (Business Name), முகவரி (Address), உரிமத்தின் வகை (License Type) மற்றும் அதன் தற்போதைய நிலை "Active", செல்லுபடியாகும் தேதிகள் மற்றும் அந்த உரிமத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தயாரிப்புகளின் பட்டியல் ஆகியவற்றைக் காண்பிக்கும்.
* நீங்கள் உள்ளிட்ட எண் தவறானதாகவோ அல்லது போலியானதாகவோ (Fake) அல்லது தரவுத்தளத்தில் இல்லாததாகவோ இருந்தால், திரையில் “எந்த விபரமும் இல்லை” (No records found) என்ற செய்தி வரும்.
* ஒருவேளை விபரங்கள் காண்பித்தாலும், அதன் நிலை (Status) Expired (காலாவதியானது) அல்லது Suspended (நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது) என்று இருந்தால், அந்த நிறுவனம் சட்டவிரோதமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். மேலும், பாக்கெட்டில் உள்ள பிராண்ட் பெயரும் இணையதளத்தில் வரும் நிறுவனத்தின் பெயரும் ஒன்றாக இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
FSSAI எண் இருந்தால் மட்டுமே அந்தத் தயாரிப்பு நிறுவனம் அரசின் உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, ஆய்வகச் சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது என்பது உறுதியாகும். FSSAI எண் இல்லை என்பதற்காகவே அந்த உணவுப் பொருள் முற்றிலும் கெட்டுப்போனது அல்லது விஷத்தன்மை வாய்ந்தது என்று நேரடியாகக் கூற முடியாது.
உரிமம் இல்லாத தயாரிப்புகள் எந்தச் சூழ்நிலையில், எவ்வளவு சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டன என்பதை நாம் அறிய முடியாது. உணவில் ஏதேனும் குறைபாடு இருந்தால், FSSAI எண் இல்லாமல் நுகர்வோர் நீதிமன்றத்திலோ அல்லது உணவுப் பாதுகாப்புத் துறையிலோ எளிதாகப் புகார் அளிக்க முடியாது.
எனவே, எந்த ஒரு பொருளை வாங்கும்போதும், தயாரிப்பு தேதி (Date of Manufacture) மற்றும் காலாவதியாகும் தேதி (Expiry Date) ஆகியவற்றை எப்போதும் கவனிக்க வேண்டும். மேலும் அதில், 14 இலக்க FSSAI எண் மற்றும் அதன் லோகோ (Logo) முறையாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்குவது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பானது.