

ஒரு பெண்ணின் மார்பை அழுத்துவது மற்றும் அவளது கீழ் ஆடையைக் கழற்ற முயல்வது போன்ற செயல்கள், கற்பழிக்கும் நோக்கத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில் இல்லாதபட்சத்தில், அவை இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் 'கற்பழிப்பு முயற்சி' என்ற குற்றத்திற்குள் வராது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒரு உயர் நீதிமன்றம், இத்தகைய செயல்கள் அப்பெண்ணை மானப்பங்கப்படுத்துதல் என்ற செயலின்கீழ் வருமே தவிர, கற்பழிப்பு முயற்சியில் வராது என தீர்ப்பளித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகைப்படம் எடுக்க 'சாயா ஸ்டூடியோ’விற்கு (Chhaya Studio)சென்றுள்ளார். ஸ்டுடியோ உரிமையாளர் ஹிமான்ஷு குமார், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை வெளியே இருக்குமாறு கூறிவிட்டு, உள்ளே இருந்து ஸ்டுடியோ கதவைப் பூட்டிக்கொண்டு, புகைப்படம் எடுத்துவிட்டு, படம் எப்படி இருக்கிறது என்பதை கணினியில் பார்க்குமாறும் அந்த பெண்ணிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து பெண்ணின் தந்தை கடைக்கு வெளியே நிற்க, ஹிமான்ஷு குமார் அப்பெண்ணின் ஆடைகளைக் கலைந்து, கீழ் அணிந்திருந்த ஆடையையும் கழற்ற முயன்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
மேலும் அப்பெண்ணின் மார்பகங்களையும் பிடித்து அழுத்தியுள்ளார். இதனால் அப்பெண் கூச்சலிட அவரது தந்தையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஸ்டூடியோ கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற போது, ஹிமான்ஷு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மறுநாள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 342, 376 மற்றும் 511 ஆகியவற்றின் கீழ் ஹிமான்ஷு மீது FIR பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், கடந்த 2013-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை), 511 (சிறைவாசம்) மற்றும் 342 (சட்டவிரோத சிறைவைப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் ஹிமான்ஷுவை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அதன்படி, அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத் தண்டனையும், மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 342-வது பிரிவின் கீழ் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதித்தது. இந்த இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து ஹிமான்ஷு மேல்முறையீடு செய்ய, மருத்துரீதியான ஆதராங்கள் இல்லை எனக்கூறி நீதிபதி பூர்ணேந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கூறிய சம்பவச் சூழல் குறித்து அவரது தந்தையின் வாக்குமூலம் ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டாலும், பாலியல் வன்புணர்ச்சி முயற்சி குறித்த குற்றச்சாட்டை ஆதரிக்கும் வகையில் சுயாதீனமான நேரில் கண்ட சாட்சியமோ அல்லது மருத்துவச் சான்றோ இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் முன்வைத்த வாதத்தையும் நீதிமன்ற அமர்வு நிராகரித்தது; சம்பவம் நடந்த நாளன்றே பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்தை அணுகியதாகவும், ஆனால் காவல் நிலைய அதிகாரி புகாரைப் பதிவு செய்ய மறுத்துவிட்டதாகவும், அதன் பின்னரே மறுநாள் புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் நீதிமன்றம் பதிவு செய்தது.
பாலியல் வன்புணர்ச்சி முயற்சி மற்றும் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குலைத்தல் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பளித்தது:
இந்த வழக்கில் பெண்ணின் உடலுக்குள் பாலியல் ரீதியான ஊடுருவல் (Penetration) நடந்ததற்கோ அல்லது அதற்கான தெளிவான மருத்துவ ஆதாரங்களோ இல்லை என இந்த தண்டனை குறைப்புக்கு காரணம் தெரிவித்துள்ளார் நீதிபதி பூர்ணேந்து சிங்.
கற்பழிப்பு முயற்சி எனக் கருதுவதற்கு, குற்றம் தயாரிப்பு நிலையைத் தாண்டி, குற்றத்தைப் பூர்த்தி செய்யும் இறுதி நிலைக்குச் சென்றதற்கான உறுதியான சான்றுகள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதாவது, உடல் உறுப்பு நுழைவு (penetration) மிகச் சிறிய அளவிலாவது நிகழ்ந்ததற்கான சான்றோ அல்லது பாலியல் வன்புணர்ச்சி முயற்சியை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தும் வெளிப்படையான செயலோ இல்லாத நிலையில் மற்றும் மருத்துவச் சான்றுகளால் உறுதிப்படுத்தப்படாத சூழலில், இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 375-ன் (பாலியல் வன்புணர்ச்சி) கூறுகள் அல்லது அதனுடன் பிரிவு 511-ஐ இணைத்துப் பார்க்கப்படும் பிரிவு 376-ன் கூறுகள் ஆகியவை இதில் பொருந்தாது என்று கூறியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை மற்றும் பெண்ணின் கண்ணியத்தைக் குலைப்பவை என்பதால், அது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-இன் கீழ் (மானபங்கம்) மட்டுமே வரும் எனக் கூறி, அதாவது பாலியல் குற்றங்களில் 'மானபங்கம்' மற்றும் 'கற்பழிப்பு முயற்சி' ஆகியவற்றிற்கு இடையேயான சட்டபூர்வமான வேறுபாடுகளை குறிப்பிட்டு, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, குற்றம் சாட்டப்பட்டவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே அனுபவித்த சிறைக்காலத்தைக் கணக்கில் கொண்டு முதன்மைக் குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்ததுடன், அவர் செலுத்திய அபராதத் தொகையைத் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டது.