

பத்தாவது உலகக்கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது தென்னாப்பிரிக்கா. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மெக்கோன்சி வீசிய இரண்டாவது ஓவரில் டிகாக் 10 ரன்களிலும், ரிக்கல்டன் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து கேப்டன் மார்க்ரம், டெவால்ட் பிரெவிஸுடன் ஜோடி சேர்ந்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்
மார்க்ரம் 18 ரன்களுக்கு அவுட் ஆக, அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். டேவிட் மில்லர் 6 ரன்களுக்கும், டெவால்ட் பிரெவிஸ் 34 ரன்களுக்கும் அவுட்டாக, 77 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா அணி தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் மார்கோ யான்சன் இருவரும் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். பிறகு அதிரடியாக விளையாடிய மார்கோ யான்சன் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்கள் குவித்து அசத்தினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ன169 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, மெக்கோன்சி மற்றும் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
170 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகியோர், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். பவர்பிளே ஓவர்களில் இந்த ஜோடி 84 ரன்களை குவித்து அசத்தியது.
அதிரடியாக விளையாடிய செய்ஃபெர்ட் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்நதார் ஃபின் ஆலன். நியூசிலாந்து வீரர்களின் அதிரடியில் கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது.
தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 170 ரன்களை வெறும் 12.5 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் சதமடித்த ஃபின் ஆலன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா, இம்முறை அரையிறுதியோடு தனது பயணத்தை முடித்துக் கொண்டது. மேலும் இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு வந்த ஒரே அணி தென்னாப்பிரிக்கா தான். நீண்ட காலமாக கோப்பை வெல்ல போராடி வரும் தென்னாப்பிரிக்காவின் இந்தத் தோல்வியால், கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இன்றைய வெற்றியின் மூலம் ஐசிசி நாக் அவுட் சுற்றுகளில் நியூசிலாந்தை தென்னாப்பிரிக்கா இதுவரை வீழ்த்தியதே இல்லை என்ற மோசமான வரலாறு மீண்டும் தொடர்கிறது. நாளை (மார்ச் 05) நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.