

நாடு முழுவதும் இன்று(நவம்பர் 1-ம்தேதி) முதல் பல முக்கிய விதிமுறைகளில் மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அந்த வகையில் இந்த மாதம் எரிவாயு விலை, எஸ்பிஐ கிரெடிட் கார்டு கட்டணங்கள், மற்றும் வங்கி நாமினி விதிகள் ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. புதிதாக வரவுள்ள விதிமுறைகளால் மக்கள் தங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்திற்கு என்ன செலவுகள் வரப்போகிறது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
சிலிண்டர் விலை :
சாமானிய மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சமையல் கேஸ் சிலிண்டர். சிலிண்டரின் விலை ஏறும்போது அது சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கும். மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையில் மாற்றத்தை கொண்டு வரும்.
சென்னையில் மானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதம் (அக்டோபர்) மாற்றம் இல்லாமல் ரூ.868.50க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.15 அதிகரித்து ரூ.1,754.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நவம்பர் 1-ம்தேதி (இன்று) சமையல் கேஸ் விலையில் மாற்றம் வருமா அல்லது அதே விலையில் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்துள்ளது.
வங்கிக் கணக்கு, லாக்கர் விதிகளில் மாற்றங்கள்:
வங்கிகளில் கணக்கு பராமரிப்பவர்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யவில்லை என்றால் அந்த தொகையை ரிசர்வ் வங்கியே விழிப்புணர்வு நிதிக்கு எடுத்துக்கொள்ளும். இந்நிலையில், வங்கி கணக்கு தொடங்குபவர்கள், லாக்கர்களில் நகைகள் வைத்திருப்பவர்கள் நாமினி ஒருவரை மட்டுமே நியமிக்கலாம். ஆனால் தற்போது புதிய விதிகளின் படி, வாரிசுதாரராக 4 பேரை நியமிக்கலாம். இந்த வசதி இன்று ( நவ.1) முதல் அமலுக்கு வருகிறது.
எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு புதிய கட்டணங்கள்:
நவம்பர் 1-ம்தேதி முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் சில வாலட்/ஆப் பேமெண்ட்களுக்கு புதிய கட்டணங்கள் பொருந்தும். பாதுகாப்பற்ற கிரெடிட் கார்டுகளுக்கு 3.75% கட்டணம் விதிக்கப்படலாம்.
இது தவிர, கிரெடிட் கார்டு, செக் அல்லது MobiKwik போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் பள்ளி அல்லது கல்லூரி கட்டணம் செலுத்தினால் பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், உங்கள் டிஜிட்டல் வால்ட்டில் பணத்தைச் சேர்த்து, பரிவர்த்தனை தொகை ரூ.1,000-ஐத் தாண்டினால், 1% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.
ஆதார் அப்டேட் :
UIDAI ஆதார் புதுப்பிப்பை எளிதாக்கியுள்ளது. அந்த வகையில் இன்று (நவம்பர் 1-ம் தேதி) முதல் ஆதார் சேவைகளில் 3 முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. நிர்வாகச் செயல்பாடுகளை எளிமையாக்கி, பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பல காரியங்களைச் செய்துகொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி ஆதார் மையத்திற்கு நேரில் செல்லாமலேயே பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பித்துத் திருத்த முடியும் என்பது இதன் முக்கிய அம்சமாகும்.அந்த வகையில் இனிமேல் ஆதார் மையம் செல்லாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண்ணை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். பயோமெட்ரிக் அப்டேட்களுக்கு மட்டும் மையம் செல்ல வேண்டும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி லாக்கர் கட்டணம் குறைப்பு:
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது லாக்கர் கட்டணங்களை குறைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பை கடந்த அக்டோபர் 16-ம்தேதியே வெளியிட்டது. இந்த லாக்கர் கட்டணங்கள் குறைப்பு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அனைத்து அளவுகள் மற்றும் பகுதிகளைக் கொண்ட லாக்கர்களுக்குப் பொருந்தும் என்றும் புதிய கட்டணங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு அமலுக்கு வரும் என்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது..
மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான செபியின் விதிமுறை:
மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான விதிமுறைகளை செபி கடுமையாக்கியுள்ளது. செபியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, AMC ஊழியர்கள் அல்லது உறவினர்கள் ரூ.15 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், இணக்க அதிகாரியிடம் (compliance officer)தெரிவிக்க வேண்டும். இது முதலீட்டாளர் பாதுகாப்பை வலுப்படுத்துடன் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியதாரர்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பித்தல்:
அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 1 முதல் நவம்பர் 30க்குள் தங்கள் வருடாந்திர வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தைத் தடையின்றி பெறுவதற்கு இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது அவசியம். இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவது தொடர்ந்து நடைபெறும். ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் அல்லது நேரடி முறைகளில் இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.