நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலோடு ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றதை அறிவோம். அதில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 78 தொகுதிகளை பாஜக கைப்பற்றி பெரும்பான்மையோடு அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் அக்கட்சி வெறும் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஒடிசாவின் 21 மக்களவை தொகுதிகளில் பாஜக அதிரடியாக 20 தொகுதிகளில் வெற்றி பெற்று பிஜு ஜனதா தளம் கட்சியை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மற்றுமுள்ள 1 தொகுதியையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜேடி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்தப் பெரும் தோல்விக்கு தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன்தான் காரணம் என பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று புவனேஸ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நவீன் பட்நாயக். அப்போது அவர் கூறுகையில், "நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள தோல்வியை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். மாநில மக்களுக்கு முடிந்தவரை சிறந்த சேவைகளைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். இருந்தும் தோல்வியே கண்டிருக்கிறோம். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, வி.கே.பாண்டியன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவை துரதிருஷ்டவசமானவை. அவர் இந்தக் கட்சியில் சேர்ந்து எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. அதேபோல், இந்தத் தேர்தலில் அவர் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனது அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கேள்வி எழும்போதெல்லாம் நான் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். எனது அரசியல் வாரிசு பாண்டியன் கிடையாது. எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள்தான் தீர்மானிப்பார்கள். இதை நான் மறுபடியும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். வி.கே.பாண்டியன் ஒரு அதிகாரியாக கடந்த 10 ஆண்டுகளாக வெவ்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். ஒடிசா இரண்டு புயல்களால் பாதிக்கப்பட்டபோதும், கோவிட் 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டபோதும் அவர் இம்மாநிலத்துக்கு ஆற்றிய பணிகள் மிகச் சிறப்பானவை. இதுபோன்ற நல்ல பணிகளுக்குப் பிறகு, அவர் ஓய்வு பெற்று எங்கள் கட்சியில் சேர்ந்து பங்காற்றினார். பணிகளை திறம்படவும் நேர்மையாகவும் செய்யக்கூடியவர் அவர். அதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்பட வேண்டியவர்.
எனது உடல் நிலை குறித்து பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனது உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது. கடந்த மாத வெயில் காலத்தில் நான் பரபரப்பாக பிரச்சாரம் செய்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். எனது உடல்நிலை எவ்வாறு உள்ளது என்பதற்கு அதுவே சான்று. எங்களது ஆட்சியிலும் கட்சியிலும் பெருமைப்படுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம். நீண்ட காலத்துக்குப் பிறகு நாங்கள் தோற்கடிக்கப்பட்டதால் இது இத்தனை பெரிய விஷயமாகப் பேசப்படுகிறது. மக்களின் தீர்ப்பை நாம் எப்போதும் சரியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒடிசா மாநிலத்தின் 4.5 கோடி மக்களும் எனது குடும்பம்தான் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன். என்னால் முடிந்தவரை அவர்களுக்குச் சேவை செய்வேன். ஒடிசா மக்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் தெரிவித்து இருக்கிறார்.