

கடலூர் மாவட்டத்தில் உள்ள (NLC India Limited) என் எல் சி நிலக்கரி நிறுவனம் புதிய சுரங்க விரிவாக்கம் மற்றும் மின் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்வதாக கூறி, கிராம மக்கள் மற்றும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
என்எல்சி-யின் இந்த நடவடிக்கையால் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் என்ற அச்சம், நிலத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு குறைவு என்ற குற்றச்சாட்டுகளுடன் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற கவலை, சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளப் பாதிப்பு பற்றிய எதிர்ப்பு ஆகிய காரணங்களால், கடந்த சில மாதங்களாகக் கடலூர் மற்றும் நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், மனு அளித்தல் போன்ற பல வழிகளில் போராட்டங்களை அப்பகுதி மக்கள் முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரான வேல்முருகன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள், “மக்கள் விருப்பமின்றி நிலம் எடுக்கக் கூடாது” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வந்தது.
என்.எல்.சி திட்டங்கள் தொடர்பாக ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் இடையே நீண்ட காலமாக அப்பகுதியில் விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தேர்தல் காரணமாக போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தளர்வுற்று இருந்தது.
தற்போது புதிய ஆட்சி வந்த நிலையில் மீண்டும் திட்டத்தை செயல்படுத்த நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் சென்றபோது அவர்களை வழிமறித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். கும்பகோணம் - நெய்வேலி சாலையில் மறியல் செய்த பொதுமக்களை மக்களிடம் அங்கு வந்த காவல்துறை கலைய உத்தரவிட்டும், பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்காததால் சுமார் 100 பேரை கைது செய்து தற்போது தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
கைது செய்யப்பட்ட மக்கள் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு தெரிவித்ததோடு தங்களுக்கு நியாயமான இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு உறுதி அளித்தால் மட்டுமே நிலங்களை தருவோம் என்று உறுதியாக உள்ளனர்.
காரணம் இதற்கு முன் இந்த திட்டத்தின் கீழ் வளையமாதேவி, கரிவெட்டி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு முறையாக மாற்று மனைகளோ, வேலைவாய்ப்போ வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சொற்ப அளவிலேயே இழப்பீடு வழங்கப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என் எல் சி திட்டத்தின் மூலம் ஒருபுறம் வேலைவாய்ப்பு மற்றும் மின்சார உற்பத்தி வளர்ச்சி என்று கூறப்பட்டாலும் மறுபுறம் நில இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலையுடன் போராட்டம் நடத்தும் மக்கள் என்எல்சி-யின் விரோதப் போக்கினை கைவிட்டு தங்களுக்கு தகுந்த இழப்பீடு மற்றும் நியாயம் வழங்க அரசு உத்தரவிட்டு உதவ வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றனர்.