
உலகளவில் மிகப் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 தொடருக்குத் தான் என்றும் முதலிடம். இந்திய இளம் வீரர்கள் பலருக்கும் இத்தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. வெளிநாட்டு வீரர்களும் இத்தொடரில் ஆர்வத்துடன் விளையாடுவதால் நாளுக்கு நாள் ஐபிஎல் தொடரின் மதிப்பும், வருமானமும் உயர்ந்து வருகிறது.
ஐபிஎல் அணிகள் வீரர்களை கோடிக்கணக்கில் ஏலத்தில் எடுக்கின்றன. அப்படி இருக்கும் போது ஐபிஎல் நிர்வாகத்திற்கு எவ்வளவு வருமானம் என்று கணக்கிட்டால் அது நம்மை பிரமிப்படைய வைக்கும் அளவிற்கு உள்ளது. அதோடு பிசிசிஐ-க்கு அதிக வருமானத்தைப் பெற்றுத் தரும் தொடராகவும் ஐபிஎல் உள்ளது.
பிசிசிஐ-யின் ஆண்டு வருமானம் குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதன்படி 2023-24 ஆம் ஆண்டில் பிசிசிஐ ரூ.9,741.7 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. இதில் ஐபிஎல் தொடரின் மூலமாக மட்டும் 59% வருமானம் கிடைத்துள்ளதாம். அதாவது இந்த ஆண்டில் மட்டும் ஐபிஎல் தொடரின் வருமானம் ரூ.5,761 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் தான் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
கோடிக்கணக்கான ரசிகர்களின் பேராதரவோடு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் வளர்ச்சி, பிசிசிஐ-யின் வருமானத்தைப் பலமடங்கு உயர்த்தி விட்டது. ஐபிஎல் தொடரையடுத்து இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளின் ஒளிபரப்பு உரிமங்களில் இருந்து ரூ.361 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது பிசிசிஐ.
அதிகபட்ச ஆண்டு வருமானத்தை ஈட்டியதன் மூலம் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. கடந்த 2007 இல் தான் ஐபிஎல் தொடர் குறித்த பேச்சு ஆரம்பித்தது. இதன்படி வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று 2008 இல் முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. அன்றே பிசிசிஐ-யின் வருமானம் அசுர வளர்ச்சியை நோக்கிப் பயணித்தது. அன்று முதல் இன்று வரை ஐபிஎல் தொடரின் மூலமாக கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டி வருகிறது பிசிசிஐ. இதற்கு மிக முக்கிய காரணம் ரசிகர்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. உலகளவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு தான், இத்தொடரின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல் தொடரில் விளையாடுவதை முதன்மையாக கருதுகின்றனர். அதற்கேற்ப சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆந்த்ரே ரஸ்ஸல், இங்கிலாந்தின் மொயின் அலி, தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் போன்ற பல வீரர்கள் விரைவிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர்.
இனிவரும் ஆண்டுகளிலும் ஐபிஎல் தொடரின் வருமானம் பலமடங்கு உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மதிப்புமிக்க இந்திய வீரர்கள் விளையாடுவதும் ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.