

பெட்ரோல் நிலையங்களில் தரமற்ற அல்லது கலப்படம் செய்யப்பட்ட எரிபொருள் (பெட்ரோல்/டீசல்) வழங்கப்பட்டால், வாகன உரிமையாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் இணையதளம் அல்லது கட்டணமில்லா உதவி எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும். வாங்க அதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தற்போது நம்நாட்டில் பைக், கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இன்று பலரது வீட்டிலும் பைக், கார் போன்றவற்றில் ஏதேனும் ஒரு வாகனம் வைத்திருப்போம். நாம் வைத்திருக்கும் வாகனத்திற்கு பெட்ரோல் அல்லது டீசல் போடுவதற்கே ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை செலவாகும். போதாத குறைக்கு கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
பெரும்பாலான மக்கள் பெட்ரோலின் விலை அல்லது மைலேஜ் (ஒரு லிட்டருக்குக் கிடைக்கும் தூரம்) ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினாலும், பெட்ரோல் அடர்த்தி (பெட்ரோல் தரம்) போன்ற எரிபொருளின் பிற பண்புகளைப் புரிந்துகொள்வதும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது.
இதற்கிடையே சில பெட்ரோல் நிலையங்களில் தரமில்லாத, கலப்பட டீசலோ அல்லது பெட்ரோலோ வழங்கப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஒரு சிலருக்கு அவர்களது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டதும் மைலேஜ் குறைவதை பார்க்கையில் பெட்ரோல் நிலையங்களில் உண்மையிலேயே தரமான எரிபொருள் வழங்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அது தொடர்பான செய்திகளும் சில நேரங்களில் வதந்திகளிலும் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பரவுகின்றன.
தரமற்ற எரிபொருளால் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வது மனச்சோர்வை அளிக்கக்கூடியது என்றாலும், சரியான வழிமுறைகளை அறிந்துகொள்வது அச்சிக்கலைத் தீர்க்கவும், வாகனத்தின் என்ஜின் சேதமடைவதைத் தடுக்கவும் உதவும்.
பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளின் தரம் மற்றும் அடர்த்தியைச் சோதிக்க (Density Check) வாடிக்கையாளர்களுக்கு முழு உரிமை உண்டு. முறையான கருவி மூலம் எரிபொருளின் தூய்மையை அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பரிசோதிக்கக் கோரலாம். அதாவது சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்திலேயே பில் (Bill) மற்றும் எரிபொருள் அடர்த்தி (Density) விவரங்களைக் கேட்டுப் பெறலாம். சந்தேகம் இருந்தால், அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் (IOC, BPCL, HPCL) அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மையங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
உங்கள் வாகனத்திற்கு எப்போது எரிபொருள் நிரப்பினாலும் எரிபொருள் வாங்கியதற்கான பில் (Bill) ரசீதை கட்டாயம் பெற்றுக்கொள்ளுங்கள். இது தான் புகார்களுக்கு முக்கிய ஆதாரமாகும். ஏனெனில் புகார் அளிக்கும் போது உங்கள் வண்டியில் உள்ள எரிபொருள் மாதிரி (Fuel sample) மற்றும் வாங்கிய ரசீது ஆகியவற்றை ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
நீங்களே கூட உங்கள் வாகனத்திற்கு போட்டது தரமற்ற அல்லது கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல்/டீசலா என்பதை சோதனை செய்ய முடியும். உங்கள் வாகனத்தில் உள்ள பொட்ரோலை ஃபில்டர் பேப்பரில் சில துளிகள் ஊற்றி, அது காய்ந்தபின் கறைகள் எதுவும் இல்லாமல் இருந்தால் அது சுத்தமானது. கறைகள் அல்லது நிற மாற்றம் இருந்தால் அது தரமற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பெட்ரோல் நிலையங்களில் தரமற்ற அல்லது கலப்படம் செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பப்பட்டால், வாகனத்தின் எஞ்சின் பழுதாக வாய்ப்புள்ளது. எனவே, முறையான புகார்கள் மூலம் இழப்பீட்டைப் பெற முடியும்.
பெட்ரோல் நிலைய ஊழியர்களின் தவறான நடத்தை, மோசடி, குறைவான அளவு எரிபொருள் வழங்குதல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் குறித்து இந்தப் புகார்கள் இருக்கலாம்.
முதலில், வாடிக்கையாளர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால், ஐந்து லிட்டர் அளவுக்கான சோதனையைக் கோரலாம். ஒவ்வொரு நிலையத்திலும் ஒரு அளவீட்டுக் கருவி உள்ளது, எனவே அளவீட்டில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் உடனடியாகக் கண்டறிய முடியும். அதிலும் திருப்தி இல்லையென்றால், ஒவ்வொரு நிலையத்திலும் உள்ள அடர்த்தி அட்டவணையைப் (density chart) பயன்படுத்தி அடர்த்திச் சோதனையை மேற்கொள்ளலாம். அடர்த்தி அளவிடும் கருவியைக் (hydrometer) கொண்டு எரிபொருளின் வெப்பநிலையைச் சரிபார்க்க வேண்டும். அடர்த்தி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவோடு இது பொருந்தினால், எரிபொருள் தூய்மையானது என்று அர்த்தம். குறிப்பிடப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், பெட்ரோலில் கலப்படம் இருக்கலாம்.
இதற்கிடையே பலருக்கும் பெட்ரோல் நிலையங்களில் உண்மையிலேயே தரமான, கலப்படம் இல்லாத எரிபொருள் வழங்கப்படுகிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. அவ்வப்போது இது தொடர்பான செய்திகளும், வதந்திகளிலும் சமூக ஊடகங்களில் பரவி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தனது சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும் எரிபொருளின் தூய்மை மற்றும் தரம் தங்களின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக உறுதியளித்துள்ளது.
மேலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் சரிபார்க்கப்படாத பதிவுகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, தனது கடுமையான தர ஆய்வு முறை குறித்த விவரங்களையும் இந்தியன் ஆயில் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
எரிபொருளின் தரத்தை உறுதி செய்வதற்காக தினமும் சோதனைகளையும் வழக்கமான ஆய்வுகளையும் நடத்துவதாக கூறியுள்ள இந்நிறுவனம், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10,000 சில்லறை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஆய்வின் போது அல்லது வாடிக்கையாளர் புகார்கள் மூலம் கலப்படம், மாசுபடுதல் அல்லது பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளை மீறுதல் போன்ற ஏதேனும் குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டால் விற்பனையாளர் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருளின் தரம் குறித்து ஏதேனும் கவலைகளோ அல்லது புகார்களோ இருந்தால் வாடிக்கையாளர்கள் உடனடியாக அந்தந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தின் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. மேலும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவைத் தளங்கள் வாயிலாகப் புகாரைப் பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு புகாரும் விரைவாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அதிகாரப்பூர்வ உதவி எண்கள் மற்றும் இணையதளங்கள்:
இந்தியன் ஆயில் (IOCL): 1800-233-3555 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் தகவல்களுக்கு Indian Oil Corporation வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
பாரத் பெட்ரோலியம் (BPCL): 1800-22-4344 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். விவரங்களுக்கு Bharat Petroleum வலைத்தளத்தைப் பார்க்கவும்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL): 1800-120-8888 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். விவரங்களுக்கு Hindustan Petroleum வலைத்தளத்திற்குச் சென்று உங்களது புகாரை பதிவு செய்யலாம்.
மேலும் பொதுமக்கள் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு இணையதளம் மூலமாகவும், மேலே உள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் நுகர்வோர் குறைதீர்வு தளங்கள் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.