மருத்துவ உலகில் புதிய மைல் கல்..! மனிதனுக்கு பன்றியின் கல்லீரல், சிறுநீரகம் பொருத்தி சாதனை!

மனித உயிர்களைக் காக்கப் போகும் புதிய உறுப்பு மாற்று தொழில்நுட்பம்.
பன்றியின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம்
பன்றியின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம்
Updated on

மனிதர்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை உணவுகளே அடித்தளம். மாறி வரும் நவீன உலகில் உணவுக் கலாச்சாரமும் மாறி விட்டது. இதன் காரணமாக மனிதர்கள் மத்தியில் நோயும் அதிகரித்து விட்டது. நோய்களை குணமாக்க மருத்துவத் துறை சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், அவ்வப்போது புதுப்புது வைரஸ்கள் பரவி மக்களை அச்சுறுத்துவதோடு, உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. மருத்துவ உலகில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சீன மருத்துவர்கள் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் யாருமே கற்பனை செய்ய முடியாத அளவிற்கு புதியதொரு சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர். அதாவது மூளைச்சாவு அடைந்த 53 வயது நபர் ஒருவருக்கு, பன்றியின் 1 கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்களைப் பொருத்தி வெற்றி கண்டுள்ளனர் சீன மருத்துவர்கள்.

மருத்துவத் துறையில் இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்துள்ளது. பன்றியின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு ‘Xeno Transplantation’ என்று பெயர். சீனாவின் சியான் நகரில் இருக்கும் ஏர் ஃபோர்ஸ் மெடிக்கல் யுனிவர்சிட்டியின் ஜிஜிங் என்ற மருத்துவமனையில் இந்த அரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

பொதுவாக ஒருவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனில், அவர் மருத்துவமனைகளில் உரிய முறையில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அவருடைய ரத்தப் பிரிவு வகையிலேயே மாற்று உறுப்புகள் கிடைத்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதற்கு பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம்.

இந்நிலையில் சீனாவில் பன்றி உறுப்புகளை மனிதருக்கு பொருத்தி அறுவை சிகிச்சை செய்ததன் மூலம், வருங்காலத்தில் உடல் உறுப்பு பற்றாக்குறைக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை முயற்சியாக செய்யப்பட்ட இந்த மாற்று அறுவை சிகிச்சை நடந்த 5 நாட்களுக்குப் பின், அந்த நபரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது பன்றியின் உறுப்புகள் மனித உடலில் சீராக செயல்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பன்றியின் உடல் உறுப்புகள் மனிதருக்கு ஒத்துப் போகும் வகையில், அதில் உள்ள 3 மரபணுக்கள் நீக்கப்பட்டு, 3 புதிய மரபணுக்கள் சேர்க்கப்பட்டன. மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு எக்தி, பன்றியின் உறுப்புகளை நிராகரிக்காமல் இருக்கவே இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உறுப்பு மாற்றம் செய்யப்பட்ட அந்த நபரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

உறுப்பு மாற்று
Transplantation
இதையும் படியுங்கள்:
#JUST IN: காலையிலேயே ஷாக்..! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு.!
பன்றியின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம்

வருங்காலத்தில் மனித உறுப்புகளுக்கான தட்டுப்பாட்டை போக்க இந்தப் புதிய தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் வரப்பிரசாதமாக அமையும்.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சிறுநீரக கோளாறு காரணமாக ஆண்டுதோறும் எண்ணற்ற நோயாளிகள் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் பன்றியின் உறுப்புகள் மனித உடலுக்கு கச்சிதமாக பொருந்துவதால், இனி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பலருக்கும் மறுவாழ்வு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

தற்போது இது சோதனை முயற்சியாகவே செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் குறித்து அடுத்தடுத்த சோதனைகள் நடத்தப்பட உள்ளன. அதன்பிறகே இந்தத் தொழில்நுட்பம் செயல் வடிவம் பெறும்.

இதையும் படியுங்கள்:
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் சாத்தியமானது எப்படி.?
பன்றியின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம்
logo
Kalki Online
kalkionline.com