
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உலக அரங்கில் இந்தியாவின் முன்னேற்றம் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி உலகின் முதல் 5 பெரிய பொருளாதார நாடுகளுக்குள் இந்தியா நுழைந்துள்ளது வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வளர்ச்சி வேகத்தை குறிக்கிறது. இந்தியா சக்திவாய்ந்த நாடாக மாறிவருவதில் பிரதமர் மோடியின் பங்கெடுப்பு முக்கியமானதாகும்.
பிரதமர் இந்தியாவின் தரத்தை சர்வதேசஅளவில் உயர்த்தும் பொருட்டு பல்வேறு உலக நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில் பிரதமர் மோடி கடந்த 2-ந் தேதி முதல் கானா, அர்ஜென்டினா உள்பட 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில் கடைசி நாடாக நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு தலைநகர் விண்டோக்வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நமீபியா அதிபர் நண்டி-நதைத்வா, மந்திரி செல்மா அஷிபாலா-முசாவி முன்னிலையில் 21 குண்டுகள் முழங்க உற்சாகமாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நமீபியா அதிபர் நண்டி-நதைத்வா உடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-நமீபியா இடையேயான உறவு முழு அளவில் மறுஆய்வு செய்யப்பட்டது. மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பம், ராணுவம், பாதுகாப்பு, விவசாயம், சுகாதாரம், கல்வி, முக்கிய கனிமங்கள், வர்த்தகம், எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
நீண்ட நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன.
பின்னர் பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி மோஸ்ட் என்சியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸின்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அதிபர் நண்டி-நதைத்வா வழங்கி கவுரவித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, சர்வதேச நாடுகளிடம் இருந்து பெறும் 27-வது உயரிய விருது இதுவாகும்.
பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடான நமீபியா செல்வது இதுவே முதல் முறையாகும். அதேநேரம் அந்த நாட்டுக்கு சென்ற 3-வது இந்திய பிரதமரும் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் டிரினிடாட் டொபாகோ சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் டொபாகோ’ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் நமீபியா நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். முன்னதாக, இந்த 5 நாடுகள் பயணத்தில் கானா மற்றும் டிரினிடாட் டொபாகோ நாடுகளின் நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்றி இருந்தார். இவற்றையும் சேர்த்து கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி மொத்தம் 17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றி உள்ளார்.
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்து மன்மோகன் சிங் 7 நாடுகளின் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தி உள்ளார்.
இது உலகளவில் மிகவும் ஈடுபாடு கொண்ட இந்திய தலைவர்களில் ஒருவராக பிரதமர் மோடியில் அந்தஸ்து உயர்ந்திருப்பதை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.