
விவசாயிகளை பொருளாதார அளவில் முன்னேற்ற பிஎம் கிசான் (PM Kisan) திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்படி தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 20 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. இந்நிலையில் 21ஆவது தவணை வருகின்ற நவம்பர் மாதத்தில் வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
21வது தவணையில் ரூ.2,000-ஐ பெற விவசாயிகள் அனைவரும் தனித்துவ விவசாய அடையாள எண்ணைப் பெற வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அடையாள எண்ணை அடிப்படையாகக் கொண்டு தான் விவசாயிகளுக்கு மத்திய அரசால் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தின் விபரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம். நில உடைமைகளை பதிவு செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு தனித்துவ விவசாய அடையாள எண் வழங்கப்படும். தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மையங்கள் மற்றும் வேளாண் துறை சார்பாக அறிவிக்கப்படும் மானியத் திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறவும் இந்த அடையாள எண் உதவும்.
ஒரு வட்டாரத்தில் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தின் விபரங்களை பதிவு செய்து, தனித்துவ விவசாய அடையாள அட்டையைப் பெற்றிருந்தாலும் கூட, வேறொரு வட்டாரத்தில் ஏதேனும் நிலம் இருந்தால் அதனையும் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். அப்போது தான் தனித்துவ விவசாய அடையாள அட்டை முழுமையாக பூர்த்தி அடையும்.
விவசாயிகள் அனைவரும் உடனே அருகில் இருக்கும் வேளாண் துறை அலுவலர்கள், வேளாண் விற்பனைத் துறை அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகி தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்ய வேண்டும்.
நவம்பர் மாதத் தொடக்கத்தில் 21வது தவணை வெளியிடப்பட இருப்பதால், அதற்குள் விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள அட்டைக்கு பதிவு செய்ய வேண்டும். தனித்துவ அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் காரடு, தொலைபேசி எண் மற்றும் சிட்டா நகலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
அதோடு விவசாயிகள் KYC புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஏற்கனவே கேஒய்சி புதுப்பிப்பு குறித்து மத்திய அரசு பலமுறை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேஒய்சி புதுப்பிக்காத விவசாயிகள் விரைந்து அதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி புதுப்பிப்பின் மூலம் போலியான விவசாயிகள் பலர் கண்டறியப்பட்டு இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பயனாளியின் நிலையை எப்படி செக் செய்வது?
பிஎம் கிசான் வலைத்தளம் மூலம் விவசாயிகள் தங்கள் பெயர் பயனாளிகள் பட்டியலில் உள்ளதா என்பதை செக் செய்யலாம். ஆதார் எண், வங்கி விவரங்கள் மற்றும் நிலப் பதிவுகள் சரியாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது அடுத்த கொடுப்பனவை சரியான நேரத்தில் பெற உதவுகிறது.
- முதலில் https://www.pmkisan.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.
- ‘Farmers Corner’ க்குச் சென்று ‘Beneficiary Status’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்.
= ‘Get Data’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் தவணை நிலை, வங்கி விவரங்கள் மற்றும் e-KYC தகவல் தோன்றும்.
இந்த விவசாயிகளுக்கு சலுகைகள் கிடைக்காது
- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நிதி நிலைமை சிறப்பாக உள்ள விவசாயிகளுக்கு சலுகை வழங்கப்படாது.
- நிறுவன நிலம் உள்ள விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.
- அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் அல்லது முன்னர் வகித்தவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள்.
- முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், நகராட்சி நிறுவனங்களின் தற்போதைய மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்துகளின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள் இதற்கு தகுதி பெற மாட்டார்கள்.
- மத்திய அல்லது மாநில அரசு மற்றும் அதன் களப் பிரிவுகளின் அமைச்சகங்கள்/அலுவலகங்கள்/துறைகளின் அரசு அதிகாரிகள் அல்லது ஊழியர்களுக்கு இதன் பலன் கிடைக்காது.
- ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் அரசுப் பணி ஊழியர்களுக்கு இதன் நன்மைகள் கிடைக்காது.
- உள்ளாட்சி அமைப்புகளின் வழக்கமான ஊழியர்களும் (மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்/பிரிவு IV/குரூப் D ஊழியர்கள் தவிர) பயன் பெற முடியாது.
- ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் (மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்/கிளாஸ் IV/குரூப் D ஊழியர்கள் தவிர) பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு இது கிடைக்காது.
- பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற முடியாது.
- இந்த திட்டத்திற்கு தகுதியற்றவராக இருந்து ஒரு விவசாயி இதன் பயனைப் பெற்றிருந்தால், அரசாங்கம் அதை அவரிடமிருந்து மீட்டெடுக்கும்.