
நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) திட்டத்தைக் கொண்டு வந்தார். இத்திட்டத்தின் படி நாடு முழுவதும் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என ஆண்டுக்கு 3 தவணையில் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொகை விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தவும், விவசாய வேலைகளின் செலவைக் குறைக்கவும் உதவுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 19 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 20வது தவணை எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு நற்செய்தியை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
கடந்த ஒரு மாத காலமாகவே 20வது தவணைக்காக விவசாயிகள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வாரணாசியில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி 20வது தவணைக்கான நிதியை விடுவிக்க இருக்கிறார்.
மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிஎம் கிசான் திட்டம் அதிகபட்ச விவசாயிகளை சென்றடைய வேண்டியும், வாரணாசியில் நடைபெறவிருக்கும் விழாவின் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது தேசிய, மாநில, மாவட்ட மற்றும் கிராம அளவிலான விவசாயிகளை பிஎம் கிசான் திட்டத்தில் பயனடையச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் போலி கணக்குகள் உருவாகாமல் தடுப்பதிலும் நாம் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் மேலும் கூறுகையில், “வாரணாசியில் பிஎம் கிசான் 20வது தவணையை பிரதமர் மோடி விடுவிக்கும் நிகழ்வை, நாடு தழுவிய பிரச்சாரமாக மாற்ற வேண்டும். விவசாயிகள் உள்பட பொதுமக்கள் பலரும் பிஎம் கிசான் திட்டத்தை ஒரு இயக்கமாகவும், திருவிழாவாகவும் கொண்டாட வேண்டும். இத்திட்டத்தின் படி விவசாயிகளுக்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்வதில் வேளாண் அறிவியல் மையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடக்கும் விழாவில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதுவரை இத்திட்டத்தின் 19 தவணைகளில் 3.69 இலட்சம் கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 20வது தவணையைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 2இல் நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி நிதி பரிமாற்றம் செய்யப்பட இருக்கிறது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.