

இந்திய தலைநகர் டெல்லியில் 18வது பிரிக்ஸ் மாநாடு இன்றும் மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இன்று (செப்டம்பர் 12) மற்றும் நாளை (செப்டம்பர் 13) வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துவது இது 4-வது முறையாகும். பிரிக்ஸ் மாநாட்டின் வர்த்தக மன்றக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
உலக தலைவர்கள் இந்தியாவில் ஒன்று கூடியுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் விழாக்கோலம் பூண்டுள்ளது
பிரிக்ஸ் மாநாட்டைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “பிரிக்ஸ் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் முன்னேற்றப் பாதையை நோக்கி நடைபோட வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டத்தை நாம் வடிவமைக்க வேண்டியது அவசியம். பிரிக்ஸ் கூட்டமைப்பினர் அனைவரும் ஒன்றாக இணைந்து உலகளவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
மக்கள், மனிதநேயம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை தான் எங்களுக்கு முன்னுரிமை. பிரிக்ஸ் கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். தற்போது பிரிக்ஸ் அமைப்பு புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது. இதே மாதிரி பிரிக்ஸ் கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும்.
உலகளாவிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்பவர்களுக்கு, உலகளாவிய நிர்வாகத்தில் பங்கு இருக்க வேண்டும். ஆகையால் ஐநா மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் முக்கிய நியமனங்களில் இந்தியா போன்ற நாடுகளுக்கு கூடுதல் அதிகாரம் தேவை.
ஒன்றிணைந்து உலக நிர்வாகத்தை சீர்த்திருத்தம் செய்வோம். எதிர்கால உலகளாவிய விதிகளை வரையறுப்பதில் சமமான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். ஏஐ, சைபர் வெளி, விண்வெளி மற்றும் உயிரி தொழில்நுட்பம் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன.
Global South நாடுகள் விதிமுறைகளைப் பின்பற்றுபவர்களாக இருப்பது மட்டுமின்றி, விதிமுறைகளை உருவாக்குபவர்களாகவும் மாற வேண்டும். பிரதிநிதித்துவம், பொறுப்புணர்வு மற்றும் விதிமுறை உருவாக்கம் உள்ளிட்ட 3 முக்கிய அம்சங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை ஐநா பாதுகாப்பு பேரவையின் சீர்திருத்தத்தை இனியும் தள்ளிப் போடக் கூடாது” என உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள்:
1. இந்தியப் பிரதமர் - நரேந்திர மோடி
2. ஈரான் அதிபர் - மசூத் பெசஸ்கியான்
3. ரஷ்யா அதிபர் - விளாடிமிர் புதின்
4. எகிப்து அதிபர் - எல் சிசி
5. இந்தோனேசியா அதிபர் - பிரபோவா சுபியாந்தோ
6. எத்தியோப்பியா அதிபர் - அபே அகமது அலி
7. மலேசியா பிரதமர் - அன்வர் இப்ராகிம்
8. சீனா அதிபர் - ஜி ஜின் பிங்
9. தென்னாப்பிரிக்கா அதிபர் - சிரில் ராமபோசா
10. பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சர் - மவுரோ வெய்ரா