

தமிழக வரலாற்றில் முதல் முறையாக, இந்தியப் பிரதமர் ஒருவர் விவசாயிகளுடன் இணைந்து , அறுவடைத் திருநாளை போற்றும் வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளார். இந்த செய்தி பொங்கல் பண்டிகையின் பாரம்பரியத்தையும் அதன் நோக்கத்தையும் நாடு முழுக்க கொண்டு சேர்க்க உதவும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பொங்கல் பண்டிகையை மகர சங்கராந்தி என்ற பெயரிலும் , வேறு சில பெயர்களிலும் கொண்டாடுகிறார்கள்.
அறுவடைத் திருநாளாகவும், இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் இப்பண்டிகை, தமிழகத்தில் 'பொங்கல் திருநாள்' என்ற பெயரில் தனித்துவமான கலாச்சாரச் சிறப்புகளுடன் போற்றப்படுகிறது. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் விதமாக அமையும் இத்திருவிழா, தமிழகத்தில் மொத்தம் நான்கு நாட்கள் மிகவும் கோலாகலமாகவும், பழமை மாறாத பாரம்பரியச் சடங்குகளுடனும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் போகிப் பண்டிகையுடன் இந்த விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, கதிரவனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் திருநாள், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை வணங்கும் மாட்டுப்பொங்கல் மற்றும் உறவினர்களுடன் கூடி மகிழும் காணும் பொங்கல் என வரிசையாகக் கொண்டாடப்படுவதால், இது 'தமிழர் திருநாள்' என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்தப் பண்டிகை, அனைத்துப் பண்டிகைகளிலும் முதன்மையான இடத்தைப் பெறுகிறது.
இந்த முறை பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் வகையில் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். ஜனவரி 13 ஆம் தேதி முதல் 15 வரை , மூன்று நாள் பயணமாக அவர் வருகை தருகிறார்.இந்த பயணத்தின் முக்கிய அம்சமே, விவசாயிகளுடன் அவர் கொண்டாட உள்ள பொங்கல் திருநாள் தான். இதற்கு முன்னர் எந்த அரசியல் தலைவரும் மக்களுடன் பொங்கல் திருநாளை கொண்டாடியது இல்லை. இந்த நிகழ்வு வெறும் சமய மற்றும் மக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் வேறு சில தாக்கங்களையும் உண்டு பண்ண உள்ளது.
பிரதமர் மோடியின் தமிழ் நாட்டு வருகை கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளின் மனதை கவரும் வகையில் இருக்க திட்டமிடப் பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சில அரசியல் சூழல்களை ஏற்படுத்தவும் முயற்சி நடக்கிறது.
பொங்கல் கொண்டாட்டத்தை தொடர்ந்து அவர் தனது பயணத்தின் ஒரு பகுதியாக, ராமேஸ்வரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள உள்ளார். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான பழமையான நாகரிகத் தொடர்பை விளக்கும் வகையில் சமீப காலமாக கொண்டாடப்படும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் தொடர்ச்சியாக கலந்துக் கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற மாநில அளவிலான பிரச்சார யாத்திரையின் நிறைவு விழாவிலும் பிரதமர் கலந்துகொள்கிறார். இந்த தொடர் நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் நாட்டில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும் , அரசியல் ரீதியில் வலுப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி அமையும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். அமித் ஷா வின் தமிழக வருகையும் அதைத் தொடர்ந்து மோடியின் வருகையும் தமிழக அரசியல் களத்தை சூடாக்குகின்றன .