
நாடு முழுவதும் அதிவேக ரெயிலாக இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் புதிதாக பெங்களூரு-பெலகாவி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளது. அதனை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 10-ம்தேதி) பிரதமர் மோடி பெங்களூரு வருகை தருகிறார். இதற்காக இன்று தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து நேராக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்து பெங்களூரு-பெலகாவி இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இன்று தொடங்கி வைக்கப்படும் வந்தே பாரத் ரெயில் (06575) கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு பெலகாவியை சென்றடையும்.
அதனை தொடர்ந்து இந்த மார்க்கம் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை நாளை( 11-ந்தேதி) முதல் தனது தினசரி சேவையை தொடங்க உள்ளது. இந்த ரெயில் சேவை புதன்கிழமை தவிர வாரத்தில் மற்ற 6 நாட்களும் இயங்க உள்ளது.
பெலகாவி-கே.எஸ்.ஆர். பெங்களூரு வந்தே பாரத் ரெயில் (26751) பெலகாவியில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். மறுமார்க்கமாக மதியம் 2.20 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 10.40 மணியை பெலகாவியை சென்றடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் தார்வார், எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி, ஹாவேரி, தாவணகெரே, துமகூரு, யஷ்வந்தபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு-பெலகாவி இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெலகாவி-கே.எஸ்.ஆர். பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி மஞ்சள் நிறப்பாதையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இந்தியா இப்போது விரைவான நகரமயமாக்கலுடன் வளர்ந்து வரும் ஒரு நாடு, இதன் மூலம் மெட்ரோ ரெயில் தற்போது இந்தியாவில், குறிப்பாக இந்தியாவின் பெருநகரங்களில் மிகவும் பிரபலமான விரைவான போக்குவரத்து முறையாக மாறி வருகிறது. தற்போது 13 நகரங்களில் இந்திய மெட்ரோ அமைப்பு செயல்பட்டு வருகிறது.
பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதையிலும், சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில் பசுமை நிறப்பாதையில் உள்ள ஆர்.வி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக மஞ்சள் நிறப்பாதையில் உள்ள ராகிகுட்டா மெட்ரோ ரெயில் சேவையை இன்று பச்சை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.