

சூரிய சக்தியைப் பயன்படுத்தி சோலார் பேனல்கள் மூலம் மின்சாரத்தை உருவாக்கும் நடைமுறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கையான முறையில் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பவர் முறைக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
விளைநிலங்கள் முதல் வீடுகள் வரை சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரே ஒரு முறை செலவு செய்தால் போதும்; பல ஆண்டுகளுக்கு மின்சாரத்தை இலவசமாக பயன்படுத்தலாம். குறிப்பாக மின்சாரக் கட்டணத்தில் இருந்தும் விடுபடலாம்.
வீட்டில் சோலார் பேனல்களை அமைக்க அதிக செலவாகும் என்பதால் மத்திய அரசு பி.எம். சூர்யா கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar: Muft Bijli Yojana) என்ற திட்டத்தைக் கொண்டு வந்து, மானியம் வழங்குகிறது. சோலார் பேனல்களை அமைப்பதற்கு மத்திய அரசுடன், மாநில அரசும் மானியம் வழங்குவதால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.
பி.எம். சூர்யா கர் திட்டத்தில் மானியம் எவ்வளவு?
சோலார் பேனல்களின் திறனுக்கு ஏற்ப மானியத் தொகை வேறுபடுகிறது.
* 1kW சோலார் திறனுக்கு மத்திய அரசு ரூ.35,000 மற்றும் மாநில அரசு ரூ.5,000 என மொத்தம் ரூ.35,000 கிடைக்கும்.
* 2kW சோலார் திறனுக்கு மத்திய அரசு ரூ.60,000 மற்றும் மாநில அரசு ரூ.10,000 என மொத்தம் ரூ.70,000 கிடைக்கும்.
* 3kW சோலார் திறனுக்கு மத்திய அரசு ரூ.78,000 மற்றும் மாநில அரசு ரூ.22,000 என மொத்தம் ரூ.1 லட்சம் கிடைக்கும்.
* 3kW திறனுக்கு மேற்பட்ட சோலார் பேனல்களைப் பயன்படுத்தினாலும் உச்சபட்ச வரம்பு ரூ.1 வரை மட்டுமே மானியம் கிடைக்கும்.
மானியம் பெற தகுதிகள் என்னென்ன?
* விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* சொந்த வீடு அல்லது வீட்டின் மொட்டை மாடியைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரின் பெயரில் வீட்டு உபயோக மின் இணைப்பு இருக்க வேண்டியது கட்டாயம்.
* ஏற்கனவே சோலார் மானியம் பெற்றிருக்கக் கூடாது.
* மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள், நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Domestic Content Requirement மற்றும் ALMM பட்டியலில் இருக்கும் சோலார் பேனல்களைப் பொருத்தினால் மட்டுமே அரசு மானியம் கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள்:
1. மின்சார கட்டண ரசீது
2. ஆதார் அட்டை
3. வங்கிக் கணக்கு
4. மொட்டை மாடியின் புகைப்படம்
5. ரத்து செய்யப்பட்ட காசோலை
விண்ணப்பிக்கும் முறை:
* மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (pmsuryaghar.gov.in) செல்ல வேண்டும்.
* மின் நுகர்வோர் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
* மின்சார பில், ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து சோலார் பேனல் மானியத்திற்கு பதிவு செய்ய வேண்டும்.
* உங்கள் விண்ணப்பத்திற்கு மின்சார வாரியத்தின் தொழில்நுட்ப அனுமதி கிடைத்ததும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் சோலார் பேனல்களை வீட்டின் மொட்டை மாடியில் பொருத்த வேண்டும்.
* நெட்-மீட்டர் பொருத்தப்பட்டு, ஆய்வு முடிந்த பின் 30 நாட்களுக்குள் மத்திய அரசின் மானியத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
* மத்திய அரசின் மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதும், மாநில அரசின் போர்ட்டலில் தானாகவே பரிசீலிக்கப்பட்டு மாநில அரசின் மானியம் வரவு வைக்கப்படும்.
பி.எம். சூர்யா கர் திட்டத்தின் கீழ் இதுவரை நாட்டில் 66,82,427 மின் இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மானியம் பெற 2027 மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு வரையிலான கால அவகாசம் முடிந்த பிறகு மேலும் நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும். ஆகையால் மின்சார கட்டணத்தில் இருந்து விடுபட உடனே சோலார் பேனல் அமைக்க விண்ணப்பியுங்கள்.