

ஏழைகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்ற, மத்திய அரசு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (Pradhan Mantri Awas Yojana-Urban), அதாவது PMAY-U 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழைக்களுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதே பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் நோக்கமாகவே உள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். தற்போது, இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தேவையான ஆவணங்கள் என்னென்ன? போன்ற பல்வேறு தகவல்களை விரிவாக இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம் (PMAY-U 2.0) திட்டத்தின் கீழ், நகர்ப்புற வீட்டுக்கடன் மீதான வட்டி மானியங்களுக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய அரசு திருத்தியமைத்து, புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) வெளியிட்ட PMAY-U 2.0-வின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, புதுப்பிக்கப்பட்ட இத்திட்டம் 2029-ஆம் ஆண்டு வரை, ஒரு கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வீடுகளை வாங்கவோ அல்லது கட்டவோ உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் முதலீடு ரூ.10 லட்சம் கோடி என்றும் இதற்கு ரூ.2.30 லட்சம் கோடி அரசு மானியம் வழங்கப்படும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PMAY-U 2.0-வின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ISS-க்குத் தகுதியுடைய பயனாளிகள், ரூ.8 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்கள் மீது 4% வட்டி மானியத்தைப் பெறலாம்; மேலும், மானியக் கணக்கீட்டிற்கான கடன் கால அளவு அதிகபட்சமாக 12 ஆண்டுகள் ஆகும். வீட்டுக்கடனுக்கான அதிகபட்சத் தொகை ரூ. 25 லட்சம் ஆகும்; அதேவேளையில், வீட்டின் அதிகபட்ச மதிப்பு ரூ. 35 லட்சத்தைத் தாண்டக்கூடாது. மானியப் பலனை ரூ.1.80 லட்சமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது; இத்தொகை பயனாளியின் கடன் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் சொத்து விலைகள் மற்றும் அதிக வட்டி விகிதம் கொண்ட வீட்டுக்கடன்களால் சிரமப்படும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு இத்திட்டம் முக்கியமாகப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதியான நபர்களுக்கான வருமான அளவுகோல்கள்
மோடி வீடு திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமென்றால், பொருளாதார ரீதியாக நலிவடைந்த சேர்ந்த (Economically Weaker Sections - EWS)பிரிவினருக்கு வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3 முதல் 6 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட, குறைந்த வருமானம் கொண்ட வகுப்பினரும் (Low Income Group - LIG), ஆண்டு வருமானம் ரூ.6-9 லட்சம் உள்ள நடுத்தர வருமானம் கொண்ட வகுப்பினரும் (Middle Income Group - MIG) இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற தகுதியானவர்கள்.
விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.
இரண்டு அறைகள், கச்சா கூரை, கச்சா சுவர்கள் கொண்ட வீடுகளில் வசிக்கும் குடும்பம். குடும்பத்தில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் ஒரு சொந்த வீட்டை வைத்திருக்கக் கூடாது; குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவரின் பெயரில் சொந்த வீடு இருந்தாலும், அந்த விண்ணப்பம் செல்லாததாகிவிடும்.
பின்வரும் அம்சங்களின் மூலம் பெருநகரங்களில் உள்ள மலிவு விலை வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
BLC-இல், தகுதியுடைய EWS குடும்பங்கள் தங்களுக்கு சொந்தமான காலி நிலத்தில் புதிய வீடுகளைக் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படும்.
புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்படும் வீடுகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 3,000 ரூபாய் என்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மானியம் (TIG) போன்ற கூடுதல் மானியங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
EWS/LIG மற்றும் MIG குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 4 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகின்றது. இந்த மானியம் ஐந்து ஆண்டு தவணைகளில் வழங்கப்படும், இதில் வழங்கப்படும் அதிகபட்ச மானியம் ரூ 1.80 லட்சமாகும்.
வட்டி மானியத் திட்டத்தைத் தவிர, PMAY-U 2.0 திட்டம் மேலும் மூன்று கூடுதல் பிரிவுகள் (Verticals) வாயிலாகச் செயல்படும்:
பயனாளியே முன்னின்று கட்டும் முறை (BLC) - இதன் கீழ், ஒரு வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் நிதியை அரசாங்கம் வழங்கும்; இதன் மூலம் பயனாளி ஒரு புதிய வீட்டைக் கட்டிக்கொள்ளலாம் அல்லது ஏற்கனவே உள்ள குடிசை அல்லது ஓட்டு வீட்டை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.
கூட்டாண்மை முறையில் மலிவு விலை வீடுகள் (AHP) - இது பெரிய அளவிலான வீட்டு வசதித் திட்டங்களுக்காக (அரசு முகமைகள், வீட்டு வசதி வாரியங்கள், மேம்பாட்டு ஆணையங்கள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள வாங்குபவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் மானிய உதவி வழங்கப்படும். மேலும், கட்டுமான நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமான முறைகள், புதுமையான வீட்டு வசதித் தொழில்நுட்பங்கள் அல்லது பேரிடர்-எதிர்ப்பு வடிவமைப்புகளைப் பயன்படுத்தினால், அவர்களுக்குக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படும்.
மலிவு விலை வாடகை வீடுகள் (ARH) - PMAY-U 2.0 திட்டத்தின் மிகப்பெரிய புதிய சேர்க்கைகளில் ஒன்று ARH ஆகும். இது இரண்டு மாதிரிகளின் அடிப்படையில் செயல்படுகிறது. முதல் மாதிரியின் கீழ், பயன்பாட்டில் இல்லாத அரசு வீடுகள் வாடகை வீடுகளாக மாற்றப்படும்; இரண்டாவது மாதிரியின் கீழ், தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் புதிய வீட்டு வசதித் திட்டங்களைக் கட்டமைக்கும். மலிவு விலையில் வாடகைக்கு வீடு தேவைப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள், பிற தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளை ARH திட்டம் முக்கியமாக இலக்காகக் கொண்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை
வருமானச் சான்றிதழ்
முதல் வீடு குறித்த உறுதிமொழி ஆவணம்
விற்பனைப் பத்திரம் / விற்பனை ஒப்பந்தம்
வங்கி கடன் ஒப்புதல் / அடமான ஆவணங்கள்
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் விண்ணப்பிக்க முதலில் https://pmay-urban.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று முகப்பு பக்கத்தில் இருக்கும் Apply for PMAY - U 2.0 என்பதை கிளிக் செய்யவும். பின்னர், தகுதியை சரிபார்க்க ஆண்டு வருமானம் மற்றும் இதர விவரங்களை உள்ளிடவும்.
ஆதார் எண்ணை உள்ளிட்டு ஆதார் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும். இப்போது, விண்ணப்ப படிவத்தில் முகவரி, வருமானம் மற்றும் தேவையான அனைத்து தகவல்களையும் பிழையில்லாமல் பூர்த்தி செய்து Submit என்ற பொத்தானை கிளிக் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா அர்பம் 2.0 (PMAY - U 2.0) திட்டத்தின் வீட்டுக் கடன் மானியத்தொகையை வங்கி மூலமும் விண்ணப்பித்து பெறலாம். அதற்கு, வங்கிகளுக்கு நேரரில் சென்று அங்கு வழங்கப்படும் PMAY விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களின் நகல்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
PMAY நகர்ப்புற உதவி எண்: 011-23060484 என்ற எண்ணிற்கு தொடர்ப்பு கொண்டும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.